தன்னை காதலித்து ஏமாற்றியதாக பெண் காதலன் வீட்டின் முன் தர்ணா மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பொண்ணையன் மகள் சுதா(26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் நர்சிங் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதி மேலத்தெருவை சேர்ந்த அழகர்சாமியின் மகன் வினோத் (29) வெளிநாடு சென்று வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், லதாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் வினோத் பலமுறை தனிமையில் இருந்துள்ளார்.
இதனால் இரண்டு முறை கருக்கலைப்பு செய்ததாக கூறும் லதா, மூன்றாவது முறையாக கர்ப்பம் அடைந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது காதலன் தாலிக் கட்டி தன்னை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் சத்து மாத்திரை என்று கூறி கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி தந்து ஏமாற்றி 3வது முறையும் கருக்கலைப்பு செய்ததாகக் கூறுகிறார்.
மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதாகவும், இதுகுறித்து மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து 56 நாட்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து சுதா, காதலன் வினோத் வீட்டிற்குச் சென்று வாசலில் அமர்ந்து நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை செல்லமாட்டேன் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வினோத் வீட்டிலிருந்த பெற்றோர்கள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில் வீட்டு வாசல் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்றதாக பெரம்பூர் காவல்நிலையத்தில் சுதா மீது வினோத் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் இரு குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் பெற்றுச் சென்றதால் நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தி வைத்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இதனை தொடர்ந்து சுதா காதலன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வினோத்தை கைது செய்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல் 420, 417 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். திருமணம் செய்வதாகக் கூறி காதலித்த பெண்ணை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் தொண்டர்கள் படை சூழ.. குதிரை வண்டியில் வலம் வந்த எடப்பாடி பழனிசாமி..!