சென்னை: சென்னை ஈசிஆர் கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் சென்ற காரை திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் துரத்தி சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் சென்ற காரை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 26 ஆம் தேதி கானத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், கடந்த 25ம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் தங்களது காரில் நாங்கள் நான்கு பேர் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக இரண்டு கார்களில் வந்த ஏழு, எட்டு நபர்கள் எங்களை வழிமறித்தனர்.
இதனால் அச்சமடைந்து காரை நிறுத்தாமல் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது கானத்தூர் பகுதியில் இரண்டு கார்களில் வந்த நபர்கள் எங்களை துரத்தி வந்து வழிமறித்து, எங்கள் காரை ஏன் இடித்து விட்டு நிற்காமல் செல்கிறீர்கள் என பிரச்சனை செய்தனர்.
மேலும், எங்கள் காரை நீங்கள் இடித்து விட்டு காரை நிறுத்தாமல் சென்றதால் உங்களை துரத்தி வந்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என வந்ததாக தெரிவித்தனர். ஆனால் நாங்கள் அதுபோன்று காரை இடிக்கவில்லை என புகாரில் குறிப்பிட்டு இருந்தனர்.
இதையடுத்து பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கானத்தூர் போலீசார் 126(2) வழிமறித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 324(2) பொது சொத்துக்கு சேதத்தை ஏற்படுத்துதல், 351(2) மிரட்டல் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மேற்படி சம்பவம் நடைபெற்ற நேரத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, பெண்களை காரில் துரத்திச் சென்ற ஆண் நபர்களை பிடிக்க கானத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்திருப்பதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.