சென்னை:தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 20 பல்கலைக் கழகங்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் வேந்தராக உள்ளார். இணை வேந்தர்களாக அந்தத்துறையின் அமைச்சர்கள் உள்ளனர். தேடுதல் குழுவின் மூலம் கண்டறியப்பட்ட 3 நபர்களில் ஒருவர் வேந்தரால் துணை வேந்தர் பதவியில் நியமனம் செய்யப்படுகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர் நியமனம் செய்வதில் உயர் கல்வித் துறைக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவியை ஆளுநர் என்பதற்கு மாற்றாக முதலமைச்சர் என மாற்ற வேண்டும் என்ற சட்டமசோதாக்கள் தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, அது மத்திய அரசின் இசைவு பட்டியலில் உள்ளதால், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு செய்வதாக கூடுதல் மனுவை தாக்கல் செய்து, அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
'தாங்களே தீர்க்க முயற்சிப்போம்'
அதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ''துணை வேந்தர்கள் நியமனத்திலும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்திலும் கடந்த ஆண்டு நிலையே தொடர்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆளுநர் நிலைபாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அதே நிலை தொடர்கிறது எனவும் தெரிவித்தனர். அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்குள் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் தாங்களே தீர்க்க முயற்சிப்போம் என்று தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநர் மாளிகையின் நிலை
தமிழ்நாடு மாநில பல்கலைக் கழகங்களின் வேந்தரான ஆளுநர், சென்னை அண்ணா பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் சேலம் பெரியார் பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களை அடையாளம் காண தேடல் குழுக்களை அமைத்திருந்தார்.
மேலும், பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினரையும் சேர்த்து நியமிக்க வேண்டும் எனவும், பல்கலைக் கழகங்களின் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினரை சேர்த்து தேடல் குழு அமைப்பது உச்ச நீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ''மாநில அரசு பல்கலைக் கழகங்களின் சட்டப் பிரிவுகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழுவினால் பரிந்துரைக்கப்படும் மூன்று நபர்களில் ஒருவர் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராக ஆளுநர்-வேந்தர் நியமனம் செய்யப்படுவார். இதுவரை இந்த நடைமுறையையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படியே, தமிழ்நாடு அரசால் பாரதியார் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகங்களுக்கு புதிய துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கு, ஆளுநர் அலுவலக கடிதத்தில், பல்கலைக்கழகங்களின் சட்டவிதிகளின் படி மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு அமைத்து அரசிதழில் வெளியிட தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அரசால் மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு அரசிதழில் அறிவிக்கையாக வெளியிடப்பட்டது.
ஆனால், ஆளுநர் தன்னிச்சையாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் 2018 ஆம் ஆண்டைய நெறிமுறைகளின்படி, பல்கலைக்கழகங்களின் தேடுதல் குழுக்களில் நான்காவது நபராக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்து பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மற்றும் சென்னை பல்கலைக் கழகங்களுக்கு நான்கு பேர் அடங்கிய தேடுதல் குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால், தமிழ்நாடு அரசு சென்னை பல்கலைக் கழக துணை வேந்தரைத் தேர்வு செய்வதற்கு அப்பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி மூன்று பேர் மட்டுமே அடங்கிய தேடுதல் குழு அமைத்து அரசாணை வெளியிட்டு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால், ஆளுநர் இத்தேடுதல் குழுவினை ஏற்காமல், தேடுதல் குழுவில் நான்காவது நபராக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்ய முதலமைச்சருக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தினார்.
ஆளுநர் அரசிற்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியுமே தவிர, ஆளுநர் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்து அறிவிக்கை வெளியிடுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. பல்கலைக் கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றுள் ஆறு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.
1. பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்
2. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம், சென்னை
3. சென்னை பல்கலைக் கழகம், சென்னை
4. அண்ணா பல்கலைக் கழகம், சென்னை
5. அண்ணாமலை பல்கலைக் கழகம், சிதம்பரம்.
6. மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.
மேலும், திருச்சி, பாரதிதாசன் மற்றும் சேலம், பெரியார் பல்கலைக்கழகங்களின் தற்போதைய துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் அவர்களது பணிக்காலம் ஆளுநரால் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டு அவை முறையே பிப்ரவரி 2025 மற்றும் மே 2025ல் முடிவுறவுள்ளது.
எனவே, பல்கலைக்கழக மானியக் குழு தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரைச் சேர்த்து, பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை என தெரிவித்திருந்தார்'' என்பது குறிப்பிடத்தக்கது.