தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநாட்டுக்கு அடுத்து என்ன? மேற்கு மண்டலத்தை குறி வைக்கும் தவெக-வின் முடிவு கை கொடுக்குமா? - TVK TARGETS WESTERN TAMIL NADU

அதிமுக, திமுக, பாஜக வரிசையில் மேற்கு மண்டலத்தை குறி வைக்க தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முடிவு கை கொடுக்குமா? அரசியல் நோக்கர்கள் இதுகுறித்து என்ன கூறுகிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

தவெக தலைவர் விஜய், சுவர் விளம்பரம் (கோப்புப்படம்)
தவெக தலைவர் விஜய், சுவர் விளம்பரம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 3:44 PM IST

கோயம்புத்தூர்:தமிழக அரசியலில் மேற்கு மண்டலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே அதிமுக, திமுக மேற்கு மண்டலத்தில் தங்களை பலம் கொண்ட கட்சியாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டனர். இதில், அதிமுகவினர் தீவிரமாக செயல்பட்டதன் காரணமாக கடந்த காலங்களில் மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாகவே மாறி இருந்தது.

சரியும் அதிமுக செல்வாக்கு: இதனை எப்படியாவது திமுக வசம் கொண்டு வர வேண்டுமென திமுக தலைமை திட்டம் போட்டாலும் அது எளிதாக நடைபெறவில்லை. இந்த சூழலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கு படிப்படியாக குறைய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவின் செல்வாக்கை குறைத்து திமுக மெல்ல வளர்ச்சி அடைய துவங்கியுள்ளது. இதனை அடுத்து மேற்கு மண்டலத்தை தங்களுடைய கோட்டையாக மாற்றும் முயற்சியில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு: இதன் காரணமாகவே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், புதிதாக கட்சி துவங்கிய நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் மேற்கு மண்டலத்தில் குறிவைத்து தனது கட்சியை பலப்படுத்த முயற்சி செய்தது. அதன் காரணமாகவே கோவையில் மக்கள் நீதி மய்யம் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 1.30 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது.

நீர்த்துப்போன மநீம: கோவையில் போட்டியிட்ட கமலஹாசன் வெற்றியின் விளிம்பு வரை வந்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகிகள் மாற்றம் என பல்வேறு குளறுபடிகளால் மக்கள் நீதி மய்யத்தின் செல்வாக்கு குறைந்தது. இதனை தொடர்ந்து தற்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் மேற்கு மண்டலத்தை தமிழக வெற்றி கழகத்தின் கோட்டையாக மாற்ற முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

விறுவிறுக்கும் தவெக:அந்த வகையில் மேற்கு மண்டலத்தில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு பூத்துகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, பூத் கமிட்டி வேலைகள் நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் கடந்த சில மாதங்களாகவே தேர்தல் பணிகளை தீவிரமாக்கி உள்ளனர். தமிழக வெற்றி கழகத்தில் உள்ளவர்கள் விஜய் ரசிகர்களாக இருந்தாலும் கட்சி ஆரம்பிக்கும் முன்னர் அதிமுக, திமுகவில் உறுப்பினர்களாக பணியாற்றி வந்ததால், அவர்களுக்கு கள பணி எளிதாக இருப்பதால் அதனை கொண்டு கட்சியை பலப்படுத்தலாம் என மேலிடம் முடிவு செய்துள்ளது.

மேலும், தவெக கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை வெளிக்காட்டி கொள்ளாமல், தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என தலைமை அறிவித்ததன் பேரில், கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மேற்கு மண்டலத்தில் இருந்து பெரும் திரளாக பொதுமக்களை மாநாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என மேல் இடத்தில் இருந்து நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாநாடு பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.. அவரவர் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு என வாக்கு வங்கிகளை உருவாக்க வேண்டும் எனவும், ரகசிய கட்டளையிடப்பட்டுள்ளதாம்.

மாநில மாநாட்டுக்கு பிறகு என்ன?: இதன் காரணமாக தவெகவினர் அனைத்து பகுதிகளிலும் சுவர் விளம்பரம் செய்தும், மாநாட்டிற்கு ஆட்களை அழைத்து செல்லும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல் மாநில மாநாடு நிறைவு செய்த பின்னர் மண்டல மாநாடுகளை நடத்தவும் தவெக முடிவு செய்துள்ளது.

குறிப்பாக மேற்கு மண்டலத்தில் முதல் மண்டல மாநாடு நடத்த கட்சி தலைமை விரும்புவதாகவும், இதற்காக உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், முதல் மாநில மாநாட்டில், மேற்கு மண்டலத்தில் இருந்து செல்லக்கூடிய கூட்டத்தை பார்த்து, ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் பிரமிப்பு அடையும் வகையில் இருக்க வேண்டும் எனவும் தவெகவினர் முடிவு செய்துள்ளனர்.

களம் காணும் பாஜக: தவெக வளர்ச்சி குறித்து மூத்த பத்திரிக்கையாளர் வேலுச்சாமி கூறுகையில், "சமீபகாலமாக கொங்கு மண்டலத்தை அனைத்து கட்சிகளும் குறி வைத்துள்ளன. பாஜக தலைவர் அண்ணாமலை கொங்கு மண்டலத்தை குறி வைத்து பாஜகவை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கொங்கு மண்டலத்தை குறிவைத்து தனது செல்வாக்கை உயர்த்த முயற்சி செய்தார்கள். தவெக கட்சியினரும் கொங்கு மண்டலத்தை குறி வைத்துள்ளனர். தற்போது தவெகவில் உள்ள இளைஞர்கள் பலர் திமுக, அதிமுகவில் உறுப்பினர்களாக இருந்து தேர்தல் பணியாற்றியதால் அவர்களுக்கு, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது எளிதாகும் என்பதால் இவர்கள் மூலம் கொங்கு மண்டலத்தை பலப்படுத்த முடிவு செய்துள்ளது என்றும் முதல் மாநில மாநாடு நிறைவு செய்த பின்னர் தான் கட்சி வளர்ச்சி குறித்து ஓரளவு அறிய முடியும்" எனவும் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details