தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரைவில் 14 மாவட்ட ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்.. பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தகவல்! - Pollachi MP Eswarasamy

MP Eswarasamy: தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி உறுதி அளித்துள்ளார்.

எம்.பி. ஈஸ்வரசாமி புகைப்படம்
எம்.பி. ஈஸ்வரசாமி புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 6:35 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர் ராம அய்யங்கார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சிth தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்து கொண்டு, 41 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

எம்.பி. ஈஸ்வரசாமி பேட்டி (credits-ETV Bharat Tamil Nadu)

பின்னர் விழாவில் பேசிய அவர், அரசுப் பள்ளிகளின் தரம், மாணவர்களின் கல்வித்தரம் உயர வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும், இலவச திட்டங்களை செயல்படுத்துவது, அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித் தரத்தில் உயர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசுப் பள்ளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியதாகவும், அவரது வழித்தோன்றலாக நமது முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளும் பார்த்து வியக்கும் வண்ணத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை 6 முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் செயல்படுத்த அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

அதேபோல், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத் தொகுதிதோறும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகவும், இதன்மூலம் மாணவர்கள் கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்க வாய்ப்பாக இருக்கும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பொள்ளாச்சி பகுதியில் அரசுத் தேர்வுகளுக்கு தேர்வர்கள் தயாராகும் வகையில் இலவசப் பயிற்சி மையம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும், தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெற்று, தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்."

இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்: தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு! - அமைச்சர் சொன்னது என்ன?

ABOUT THE AUTHOR

...view details