தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமை நிலைப்பாடு..அதிமுகவுக்கு வெற்றியை தருமா? - EDAPPADI PALANISWAMI

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்று பிடிவாதம் பிடிக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ்
முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2025, 8:43 PM IST

சென்னை:அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எட்ப்பாடி பழனிசாமி , கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற பிடிவாதப் போக்கில் இருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தி உள்ளனர்.

தொண்டர்களிடம் எழும் கேள்வி:1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் மரணத்துக்குப் பின்னர் பிரிந்திருந்த அதிமுக ஒன்றிணைய காரணமாக இருந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவருக்கு தனித்தனியே தலைவர்கள் மரியாதை செலுத்தியதை ஊடகங்களில் பார்த்த அதிமுக தொண்டர்கள் மனதில் என்றைக்குத்தான் இவர்கள் ஒன்று சேருவார்கள்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலில் வென்றாலும், தோற்றாலும் வலுவான கட்சியாக இருந்த அதிமுக வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் அந்த கட்சியின் கடைகோடி தொண்டரிடம் எழும் கேள்வியாகவும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் திமுகவும் கூட்டணி கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து அரசு நிகழ்ச்சிகளிலும், திமுகவின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு என்று மேடைதோறும் அவர் சொல்லி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம்:ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் முதன்மையாக உள்ள அதிமுகவின் தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து திமுகவை எதிர்கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது எனவும் அவர் கூறி வருகிறார்.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக ஒன்றினைய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிருப்தி அணி தலைவர்கள், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், இவர்களின் கோரிக்கைகளுக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில், "ஓநாயும், வெள்ளாடும், ஒன்று சேராது, களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? துரோகியும்,விசுவாசியும் தோளோடு தோள் நிற்க முடியாது," என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா (ETV Bharat Tamilnadu)

எடப்பாடி பழனிசாயியின் மறைமுக தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். ஊரக உள்ளாட்சி தேர்தல்,சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் என அதிமுக தோல்வியை சந்தித்தற்கு எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமைதான் காரணம்." என்று கூறியுள்ளார்.

வளர்ச்சி பாதைக்கு வித்திட்ட தலைவர்கள்:பிடிவாதப் போக்கை கைவிடாமல் தனித்தனி பாதைகளில் பயணிக்கும் அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வாய்ப்பிருக்கிறதா? பிரிந்து சென்றவர்களை எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் சேர்க்க மறுப்பது ஏன்? அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என பல கேள்விகளை மூத்த பத்திரிக்கையாளர் துரை.கருணாவிடம் முன் வைத்தோம்.

அவர் ஈடிவி பாரத் தமிழ்நாடுவுக்கு அளித்த பேட்டியில், "அதிமுக மிகப்பெரிய தொண்டர்கள் பலம் பொருந்திய கட்சியாகும். எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகள் அதிமுக உருவாக்கம், கட்சி வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றினர்.

ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கட்சியின் பிடியை தங்கள் வசம் வைத்திருந்தனர். எம்ஜிஆர் மரணத்துக்குப் பின்னர் கட்சி பிரிந்தபோது எம்ஜிஆர் மனைவி ஜானகி, மறைந்த முதலமைச்சர் இருவரும் பிடிவாதப் போக்கை விடுத்து கட்சி ஒன்றிணைய காரணமாக இருந்தனர். இதன் தொடர்ச்சியாக 1991ஆம் ஆண்டு அதிமுக பெரும் வெற்றி பெற்றது. திமுகவைவிட அதிமுக கட்டுக்கோப்புடன் இருந்தது.

ஓரம்கட்டப்பட்ட ஒபிஎஸ்:ஆனால், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அடுத்தடுத்த பிரச்னைகளை சந்தித்த அதிமுக தொடர்ந்து சிக்கலில் இருந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஆளும் கட்சியாகத் தொடர்ந்ததால் அதிருப்தி பெரிதாக வெளிப்படவில்லை. ஒபிஎஸுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்துவிட்டு ஆட்சிரீதியாக அவரை ஓரம் கட்டினார் இபிஎஸ். கட்சி ரீதியாகவும் ஒபிஎஸ்ஸை ஓரம் கட்டினார்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை அடுத்து அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த பின்னர் தலைவர்களுக்குள் அதிருப்திகள் அதிகரித்தன. அதன் பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல்கள் என அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி தன்னையே முன்னிலைப்படுத்தி வந்தார். தொடர்ந்து அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், 'அதிமுக பலவீனமாக உள்ளது எனவே பிரிந்து இருக்கும் தலைவர்கள் ஒன்றினைந்தால்தான் வலிமைமிக்க கட்சியாக அதிமுக திகழும். அப்போதுதான் கூட்டணி கட்சிகள் நெருங்கி வரும். அப்போதுதான் திமுகவை வலுவாக எதிர்கொண்டு தோற்கடிக்க முடியும்,'என்று கருதுகின்றனர். எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்களுக்கும், ஓபிஎஸ், சசிகலா ஆகிய தலைவர்களிடமும் இதே நிலைப்பாடு உள்ளது.

தவறான எண்ணம்:ஆனால் எடப்பாடி பழனிசாமியோ பிரிந்து சென்ற தலைவர்களை சேர்க்க முடியாது என்பதில் பிடிவாதமாக உள்ளார். இதன் விளைவாக 2026 தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை எதிர்கொள்ளும் என்பது பொதுவெளி பார்வையாக உள்ளது. ஒபிஎஸ், சசிகலா ஆகியோர் வந்தால் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி தயங்குகிறார். தவெக,பாமக,தேமுதிக ஆகிய கட்சிகளுடன் இணைந்து வலிமையான கூட்டணி உருவாக்கி வெற்றி பெற்றுவிடலாம் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். ஆனால், அவரது எண்ணம் தவறான முடிவாகும்.

நடிகர் விஜயை பொறுத்தவரை அவரது கட்சிக்கு என நிரூபிக்கப்பட்ட வாக்கு வங்கி இல்லை. வரும் தேர்தல்தான் அதற்கான களமாக அவருக்கு இருக்கும். பாமகவுக்கு 4% வாக்கு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு 1% வாக்கு வங்கி உள்ளது. அதிமுகவுக்கு 20% வாக்கு வங்கிதான் உள்ளது. திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 38% முதல் 40% வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்க வேண்டும்.

பாஜக அழுத்தம் கொடுக்குமா?:இதை உணர்ந்துதான் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரிந்து சென்ற தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் பிடிவாதமாக, அவர்களை சேர்க்கமாட்டேன் ஈபிஎஸ் தொடர்ந்து கூறி வருவது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை அதிகரித்துள்ளது. அதிமுகவின் பலவீனம் என்பது திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பிடிவாதப் போக்கை விட்டுக்கொடுக்காத வரையில் அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை.

அதேநேரத்தில் டெல்லி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, வேறு வழியில்லாமல் பாஜகவின் நிர்பந்தத்தின் பேரில் பிரிந்து சென்ற தலைவர்களை சேர்க்கும் முயற்சியில் எடப்பாடி இறங்கக்கூடும். ஆனால், அப்படி ஒரு நெருக்கடிக்கு காத்திருக்காமல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் அதிமுகவின் வீழ்ச்சியை அவர் தடுத்து நிறுத்த வேண்டும்." என்றார் துரை.கருணா.

ABOUT THE AUTHOR

...view details