நீலகிரி:நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கட்டப்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட ரேலியா அணை மற்றும் ஒசட்டி பகுதியில் காட்டெருமை ஒன்று காலில் பிவிசி (PVC) குழாய் சிக்கியவாறு சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி கட்டப்பட்டு வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் வனத்துறை தனிக் குழு அமைத்து காட்டருமையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறை கால்நடை மருத்துவர் குழு மற்றும் வனத்துறையினர் காட்டெருமையை கண்காணித்து வந்த நிலையில் இன்று (ஜன.29) அந்த காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, அதன் காலில் சிக்கியிருந்த PVC குழாயினை வனத்துறை தனிக் குழு நீக்கினர். பின் காட்டெருமையை மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.