சென்னை:சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 57வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷ்பாஷா. இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கவுஷ் பாஷா உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக அவரது மனைவி ஷாஜிதா பானு உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கவுஷ் பாஷாவிற்கு சர்க்கரை, நுரையீரல், வலிப்பு ஆகிய பாதிப்புகள் இருந்த நிலையில், அவர் இறப்பு குறித்து உறவினர்கள் யாரும் சந்தேகப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர். ஆனால், சந்தேகிக்கும் வகையில் மரணமடைந்துள்ள கவுஷ் பாஷா குறித்து தகவல் அறிந்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கவுஷ் பாஷா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றுள்ளனர்.
ஆனால், மனைவி ஷாஜிதா பானு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எங்கள் மத முறைப்படி பிரேத ரிசோதனை செய்ய மாட்டோம் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கவுஷ் பாஷாவின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ஷாஜிதா பானுவின் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த போலீசார், அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதனால் வில்லிவாக்கம் போலீசார் கவுஷ் பாஷாவின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் பிரேத பரிசோதனை அறிக்கையில், கவுஷ் பாஷா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்ததுள்ளது.