சென்னை:கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவக்கழிவுகள், அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாகி வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கேரள மருத்துவக் கழிவுகள் சட்டவிரோதமாக தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கேரள மாநிலம் தொடர்பானம வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தபோது, மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.