சென்னை:நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி தென்னிந்தியாவின் பலமான கூட்டணியாக வலம் வருகிறது. இந்த தேர்தலில் திமுகவிற்கு சவால் நிறைந்த தொகுதியாக தமிழகத்தில் சில தொகுதிகள் இருந்தது. அதிலும் குறிப்பாக, விருதுநகர், தருமபுரி, நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட தொகுதிகள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு சவால் நிறைந்த தொகுதிகளாக இருந்தது. அவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
விருதுநகர் தொகுதி:விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் களத்திலிருந்தனர். இதில் பாஜக வேட்பாளர் ராதிகா சவால் நிறைந்த போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த விஜய பிரபாகரன் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், சிட்டிங் எம்பியுமான மாணிக்கம் தாகூருக்கு கடைசி சுற்று வரை கடும் போட்டி கொடுக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை அமைந்தது. கடைசி சுற்று வரை யார் வெற்றி பெறுவார் என்ற இழுபறி நீடித்தது, இறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தருமபுரி தொகுதி: வேட்பாளர் அறிவிக்கப்பட்ட முதலே திமுகவிற்கு வெற்றி கேள்விக்குறியாக பார்க்கப்பட்ட தொகுதியாகவே தர்மபுரி தொகுதி இருந்தது. ஏனென்றால், அத்தொகுதியில் பாஜக கூட்டணியான பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி களமிறக்கப்பட்டார்.
தருமபுரி தொகுதியில் கணிசமான வாக்குகளை வைத்துள்ள பாமகவிற்கு வெற்றி பெறும் தொகுதியாகவே இருந்தது. பிரச்சாரங்களில் ஈடுபடும் போது சௌமியா அன்புமணி தன் மகள்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டது வாக்காளர்களைக் கவர்ந்தது. அதேபோல், திமுக வேட்பாளர் மணி தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி போல் பிரபலமாக இல்லை என்பது பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. கருத்துக் கணிப்பு முடிவுகளுமே சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டது.
அதன்படியே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சௌமியா அன்புமணி முன்னிலையில் இருந்தார். கடைசி மூன்று சுற்றுகளைத் தவிர்த்து மற்ற அனைத்து சுற்றுகளிலுமே சௌமியா அன்புமணி முன்னணியில் இருந்தார். கடைசி மூன்று சுற்றுகளில் திமுக வேட்பாளர் மணி அதிக வாக்குகளைப் பெற்றதால், சௌமியா அன்புமணி தோல்வியைத் தழுவினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் தோல்வியுற்று திமுக வேட்பாளர் மருத்துவர் செந்தில்குமார் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த முறையும் தருமபுரி தொகுதியை திமுக மீண்டும் தக்க வைத்துக்கொண்டது.