சென்னை: இந்திய மக்களின் சேமிப்பில் எப்போதுமே தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மார்ச் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வதும், அவ்வப்போது குறைவதுமாக இருந்து வருகிறது. இதனால் நகை முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் கடந்த 19-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.49 ஆயிரத்து 80க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை ரூ.49 ஆயிரத்திற்கு மேலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50க்கும், கிலோ வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது 1 சவரன் தங்கத்தின் விலை ரூ.51 ஆயிரத்து 120 ஆக விற்பனையாகி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த 10 நாட்களில் வெள்ளி விலையும் கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்துள்ளது. இன்றை மாலை நேர நிலவரப்படி வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.80.80 காசுகளுக்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.80,800-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை உயர்வுக்கு காரணம்:பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு காலக்கட்டத்தில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, கரோனா மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக தங்கத்தின் விலை உயர்வை சந்தித்தது. ஆனால், தற்போது எவ்வித காரணங்களும் இல்லாமல் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் தொடர் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் கோல்ட் குரு சாந்தகுமார், ஈடிவி பாரத்திற்கு கூறுகையில், "எவ்வித காரணங்களும் இல்லாமல் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் வேலை குறியீடு வீழ்ச்சியினால், நிதி நெருக்கடி காரணமாக அங்கு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் குறைக்க அமெரிக்க மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது.