திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழ்நாடு வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சித் தலைமை இன்று வெளியிட்டது. அதில், கோயம்புத்தூரில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த பாஜக நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், பாஜகவில் சட்டமன்ற குழு தலைவராகவும், நெல்லை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் கூட, நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசையில் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பே கட்சித் தலைமையிடம் விருப்பத்தைத் தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து தேர்தல் நெருங்கிய நிலையில், கடந்த பல மாதங்களாக நெல்லையில் நயினார் நாகேந்திரன் தான் இறுதியாக போட்டியிடுவார் என பாஜக வட்டாரங்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். மேலும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்ன,ரே சமீபத்தில் நயினார் நாகேந்திரன் நெல்லை பகுதியில் பொதுமக்களிடம் வெளிப்படையாக தாமரை சின்னத்தில் தனக்கு ஆதரவு தரும்படி பிரச்சாரம் செய்திருந்தார்.