சென்னை: 1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடிகளில் ஒன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள கொடியாகும். இக்கொடியானது பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. இது 12 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாகும். இந்த தேசியக் கொடி 1947, ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்ட முதல் கொடிகளில் ஒன்றாகும்.
1947-ம் ஆண்டில் ஏற்றப்பட்ட கொடிகளில் எஞ்சியிருக்கும் ஒரே கொடியும் இதுவாகும். சுதந்திரத்தை அடைய இந்தியர்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த போராட்டத்தின் சாட்சியமாக தேசியக் கொடி உள்ளது. இது தூய பட்டினால் ஆனது. சுமார் 3.50 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும் கொண்டது.
1947 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை 5.30 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள இந்திய சுதந்திரக் காட்சியகம் இந்தியக் கொடியின் பரிணாம வளர்ச்சியையும், புகழ்பெற்ற மூவர்ணக்கொடியின் பின்னணியில் உள்ள கதைகளையும் காட்சிப்படுத்துகிறது.
புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, பிரிட்டிஷ் குடியேற்றத்திலிருந்தும், கோட்டையைச் சுற்றியுள்ள பல பூர்வீக கிராமங்கள், ஐரோப்பியக் குடியேற்றங்களை மெட்ராஸ் (சென்னை) நகரத்துடன் இணைக்கப்பட்டதன் மூலம் ஏற்பட்ட அடுத்தடுத்த விரிவாக்கத்திலிருந்து எழுந்தது.