செங்கல்பட்டு:தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலையின் எரிபொருள் நிரப்பப்படுவதை பிரதமர் மோடி மார்ச் 4ம் தேதி பார்வையிட்டார். இது குறித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் முதல் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (Fast Breeder Reactor) அணு உலையில் (500 மெகாவாட்) 'கோர் லோடிங்கை' பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அணுசக்தித் துறையின் கல்பாக்கம் அணுஉலை வளாகத்தில் பாவினி நிறுவனம் (Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd (BHAVINI) ) 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையைக் (Prototype Fast Breeder reactor (PFBR)) கட்டியுள்ளது. திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட இந்த ஈனுலை இந்தியாவில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடர்பாக பாவினி நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த அணு உலை செயல்பாட்டிற்கு வந்தால் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியில் இயங்கும். அதிவேக அணு உலையைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
சரி, ஈனுலை என்றால் என்ன அறிவியல்பூர்வமாக இதன் பலன்கள் என்னவென்பதை அறிவதற்காக முனைவர் ஆர்.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம். கல்பாக்கம் அணுமின்நிலைய கதிரியக்கம் மற்றும் சுற்றுச்சூழல்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான இவர், ஈனுலைகளால் தொழில்நுட்பரீதியாக கிடைக்கவிருக்கும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கியதோடு, இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் இருப்பதாக கூறினார். ஈடிவி பாரத் நிருபரிடம் அவர் பேசுகையில், " வேக ஈனுலையின் முக்கிய மைல் கல்லாக இருக்கக் கூடிய, ரியாக்டர் கோர் எனப்படும் மையப்பகுதியில், Safety rods, Fuel rods , Blankets போன்றவை பொருத்தப்படக்கூடிய செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அணு உலைகளில் மின்னுற்பத்தியை தொடங்குவதற்கு இது முக்கிய செயல்பாடாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரையிலும் அணு உலைகளை நாம் இரண்டு பிரிவுகளாக காணலாம். ஒன்று இயற்கையாக கிடைக்கும் யுரேனியத்தில் இயங்கும் அணு உலைகள். இந்த வகையில் 24 அணு உலைகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இந்த வகையிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட முதல் அணு உலை கல்பாக்கத்தில் தான் உள்ளது. (Madras atomic Power Projects 235 MW )
இரண்டாவது அணுஉலைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவு யுரேனியத்தில், பிளவுபடக்கூடிய பொருட்கள், பிளவுபடாத எரிபொருளும் உள்ளன. பிளவுபடாத எரிபொருள் 97 சதவீதமாக இருக்கும். இந்த பயன்படுத்தப்படாத அதாவது பிளவுபடாத எரிபொருளில் புளுட்டோனியமும் உற்பத்தியாகி கலந்திருக்கும். எரிபொருள் தண்டங்களிலிருந்து (Fuel Rods) இந்த புளுட்டோனியத்தை ரசாயனமுறையை பயன்படுத்தி பிரித்து எடுக்கலாம்.
இவ்வாறு கிடைக்கும் புளுட்டோனியம் சக்தி வாய்ந்த எரிபொருளாகும். இதனை மறுசுழற்சி எரிபொருளாக பயன்படுத்தியும் ஒரு அணுஉலையையே இயக்க முடியும். இதுதான் இந்தியாவின் கனவுத் திட்டமாகவும் உள்ளது. இதற்கான கட்டமைப்புதான் தற்போது கல்பாக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தில் இதனை ஒரு மகத்தான சாதனை என கூற முடியும் எனவும் விளக்கம் அளித்தார்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக உலக நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. மற்ற எரிபொருட்களைப் போன்று அல்லாது புளுட்டோனியம் அணுகுண்டையும் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தான் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது இதனை தெளிவுபடுத்த வேண்டியது அரசியல் மற்றும் அறிவியல் சமூகத்தின் கடமை எனவும் வெங்கடேசஸ்வரன் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களாக சூரிய சக்தி, காற்றாலை போன்ற ஆற்றல் மூலங்கள் இருக்கும் போது, ஏன் புளுட்டோனியம் அணு உலையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த வெங்கடேஸ்வரன், காற்றாலை, சூரியசக்தி போன்றவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களாக இருந்தாலும், மனித தலையீட்டால் இதனை புதுப்பிக்க முடியாது. இயற்கையின் செயல்பாட்டின் அடிப்படையில் இவை கிடைக்கின்றன. ஆனால் நாமாகவே புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்கள் இருக்கிறதா? என கேட்டால் அது நிலக்கரி மின்சாரமோ, எண்ணெய் மூலம் கிடைக்கும் மின்சாரமோ கிடையாது.
தற்போது கல்பாக்கத்தில் அமைக்கப்படவிருக்கும் அணு உலைதான் மனித தலையீட்டின் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொடுக்கிறது (Sustainable Energy). இது அதிகவேகத்துடன் கூடிய நியூட்ரான்களை கொண்ட உலை, எந்த பொருளை தனது சக்திக்கு பயன்படுத்துகிறதோ, அதே எரிபொருளை மீண்டும் உற்பத்தி செய்கிறது. புளுட்டோனியம், மற்றும் யுரேனியம் என இரண்டும் எரிபொருளாக பயன்படுத்தி இயங்கும் இந்த உலை, புதிய புளுட்டோனியத்தை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். தியரிட்டிக்கலாக 1 கிராம் புளுட்டோனியம் எரிந்தால் 1.2 கிராம் புளுட்டோனியம் புதிதாக உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது. இது பிராக்டிக்கலாக நடைமுறையில் இதுவரை சாத்தியப்படவில்லை. கல்பாக்கம் அணு உலையின் திறனைப் பொருத்து , இதற்கு நெருக்கமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
கல்பாக்கம் அணு உலை எப்போது மின்சார உற்பத்தியை துவக்கும் என்பதை அறிவதற்காக, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் வெங்கட்ராமனிடம் கேள்வி எழுப்பினோம். ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், 4 மாதங்களில் எல்லா எரிப்பொருளும் நிரப்பப்பட்டு, அதன் பின்னர் அட்டாமிக் எனர்ஜி துறையின் அனுமதியைப் பெற்றப்பின்னர் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் துவக்கப்படும் என்றார். 5 மாதத்தில் இந்த விரைவு ஈனுலை மின்னுற்பத்தியை துவங்கும். செயல்பட துவங்கியப் பின்னர் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அணுசக்தி துறையின் அனுமதியை பெற்று மெதுவாக 500மெகா வாட் மின் உற்பத்தியை எட்டுவோம் எனவும் வெங்கட்ராமன் கூறினார்.
விரைவு ஈனுலைக்கான நவீன தொழில்நுட்பத்தையும், உள்நாட்டிலேயும் தயார் செய்துள்ளதாக கூறிய அவர், சிறிய பம்பு செய்யும் போதும், தொழிற்சாலைகளுக்கும் பயிற்சி அளித்து , 200க்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை திறன் பெற்றவர்களாக மாற்றியுள்ளோம் என்றார். இங்கே உள்ளூரில் உள்ள நிறைய தொழிற்சாலைகள் சர்வதேச அளவில் பயன்படும் வகையில் பொருட்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளனர் எனவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஈனுலைக்கு கிளம்பிய எதிர்ப்புகள்: கல்பாக்கம் அணு மின்நிலைய வளாகத்தில் அமையவிருக்கும் ஈனுலைகளுக்கு எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை. ஈனுலை துவக்க விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இது குறித்து விளக்கம் அளித்த திமுக திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஈனுலை அமைக்கப்படுவதை திமுக ஏற்கவில்லை என்பதை காட்டும் விதத்திலேயே முதலமைச்சர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலையைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தி.மு.க. செயல்பட்டது. அதுபோல, கல்பாக்கம் விவகாரத்திலும் நடவடிக்கை எடுப்போம், தமிழ்நாடு மக்கள் ஏற்காததை நாங்கள் ஏற்க மாட்டோம்" என்றார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:ஈனுலை சார்ந்த அணுஉலைகளில் குளிர்விப்பானாக சோடியம் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பதால் உலக நாடுகள் பல இத்திட்டத்தை கைவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகிறார். சென்னைக்கும், வட தமிழகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு:பொதுவாகவே அணுஉலைகளுக்கு எதிரான வலுவான போராட்டங்களை முன்னெடுத்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பான "பூவுலகின் நண்பர்கள்" ஈனுலை திட்டத்தை கடுமையாக சாடியுள்ளது. இந்த வகை உலைகளில் குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் இத்திட்டம் கைவிடப்பட்டதாக அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
இதையும் படிங்க:"எலான் மஸ்க்குக்கே கிடைக்காத வாய்ப்பு" உலக விண்வெளி மையமாக மாறப்போகும் தமிழ்நாடு!