சென்னை:அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டை வழங்க அதிமுக முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நடைபெற உள்ள 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் நேற்று (மார்ச்.20) தேமுதிக இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர், அதிமுக - தேமுதிக கூட்டணி நேற்று (மார்ச்.20) உறுதியான நிலையில் ஐந்து தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டதில், தேமுதிகவின் முக்கிய கோரிக்கையான ஒரு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கிய பங்கு வகித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகத்திற்கான மாநிலங்களவை தேர்தலில், அதிமுக கூட்டணியின் சார்பில் தேமுதிகவிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ராஜ்யசபா சீட் உறுதியான பின்னரே தேமுதிக - அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்க முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக ராஜ்ய சபா சீட் கொடுக்க முன் வந்த காரணம் என்ன? நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான பிரம்மாண்ட கூட்டணி அமைந்துள்ள நிலையில், பாஜகவும் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. அதே சமயம் பிரம்மாண்ட கூட்டணி அமைப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில், கூட்டணிக்கு யாரும் முன் வராத நிலையில், எங்கே தேர்தலில் தனித்து விடப்படுவோமோ? இதனால், மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என கருதியே தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:அதிமுக 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. யார் யாருக்கு வாய்ப்பு?