கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் கோவை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், தமிழகத்திற்கு மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம், அனைத்து வசதிகளுடன் கோவையில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
கோவை மக்கள், விளையாட்டு வீரர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதனை வரவேற்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது.
இதில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு முதற்கட்டமாக கோயம்புத்தூர் ஒண்டிப்புதூர் திறந்த வெளி சிறைச்சாலை, எல் அண்ட் டி தேசிய நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழக பின்புறம், கோயம்புத்தூர் மத்தியச் சிறை மைதானம் உள்ளிட்ட நான்கு இடங்கள் கண்டறியப்பட்டன.
அதன்பின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அறிவதற்காக, ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள திறந்த வெளி மைதானத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில், திறந்த வெளி சிறைச்சாலை உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு நிலம் மாறுதல் செய்ய கிழக்கு மண்டலத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோயம்புத்தூர் மேற்கு வட்டாட்சியர் சரவணகுமார் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்தச் செய்தி கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஒண்டிப்புதூர் திறந்தவெளி மைதானம்: அரசு அறிவித்துள்ள சிறைத்துறை வசம் இருக்கும் ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை மைதானம் மொத்தம் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மொத்த பரப்பளவையும் 20 ஏக்கர், 10 ஏக்கர் என பிரிக்கும் வகையில், இடையில் உள்ளூர் சாலை ஒன்று உள்ளது.
30 ஏக்கரிலும் சுமார் 33 தண்டனைக் கைதிகளைக் கொண்டு சிறைத்துறை சார்பில் விவசாயம் நடக்கிறது. இங்கு சுமார் 900 தென்னை மரங்கள் உள்ளன. மேலும், ஆடு, மாடு, கோழி வளர்ப்பும் நடைபெற்று வருகிறது. பொதுவாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க சுமார் 30 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், இங்கு அதற்கு தேவையான இட வசதி இருப்பதும், அருகிலேயே சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை இருப்பதும் சாதகமாக உள்ளது.
இந்த நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், "இந்தப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமையும் பட்சத்தில், இப்பகுதி பல்வேறு வளர்ச்சிகள் பெறும். சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கும்” என தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த பகுதி கடுமையான போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. அதனைக் கருத்தில் கொண்டு சாலை வசதிகளை மேம்படுத்தி கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க வேண்டும். அதேபோல், கோவையில் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், அதற்கான தீர்வையும் ஏற்படுத்திய பின்னர் இந்த ஸ்டேடியம் அமைய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கூறுகையில், "மேற்கு மண்டலத்தில் இதுவரை கிரிக்கெட்டுக்கு என எந்த ஒரு வசதிகளும் செய்து தரப்படவில்லை. கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் தான் கிரிக்கெட் விளையாட்டுக்கென தனி மைதானம் உள்ளது. அங்கு தான் தேசிய அளவிலான போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இங்கு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமையப்பெற்றால், இங்கு உள்ள வீரர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஐபிஎல், டிஎன்பிஎல் போட்டிகளைக் காண சென்னை, பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்காது. அந்த போட்டிகளை இங்கேயே காணலாம்.
அதேநேரம், பயிற்சி பெற்று வரும் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் பயிற்சியையும், அறிவுரைகளையும் பெற முடியும். சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்களும் இங்கு வருவதால், தங்களுடைய திறமைகளையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். அதேநேரம், மைதானங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:"சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முதலமைச்சர் தயங்குகிறார்" - அன்புமணி ராமதாஸ் சாடல்! - ANBUMANI RAMADOSS