தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" -பரந்தூர் பகுதி மக்கள் உறுதி! - PEOPLE OF PARANDUR AREA

"விஷத்தை குடித்து செத்துப் போவேமே தவிர இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" என பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

பரந்தூர் மக்கள்
பரந்தூர் மக்கள் (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 7:59 PM IST

சென்னை: "விஷத்தை குடித்து செத்துப் போவேமே தவிர இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" என பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் இரண்டாவது சென்னை விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியை சுற்றியுள்ள மக்கள் 910 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தவெக தலைவர் விஜய் பரந்தூருக்கு சென்றார். எனினும் பரந்தூர் கிராமத்துக்குள் செல்ல விஜய்க்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மேலும் தனியார் திருமண மண்டபத்தின் முன்பு வேனில் இருந்து பேசுவதற்கு அளித்தனர். மதியம் 12:30 மணியளவில் பரந்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் சூழ வேனில் இருந்தபடி விஜய் பேசினார்.

விஜய் வருகை வலிமை அளித்துள்ளது:

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசியது குறித்து அப்பகுதி மக்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடுவுக்கு பேட்டி அளித்தனர். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் செயலாளர் சுப்பிரமணி, "பரந்தூரில் பசுமை வழி விமான நிலையம் அமைவதை எதிர்த்து நாங்கள் நடத்தும் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் அவரது கட்சியின் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றி இருந்தார். இதற்காக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் அவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தோம் .

ஆனால் தவெக கட்சித் தலைவர் விஜய், நீங்கள் வர வேண்டாம் நானே களத்தில் வந்து உங்களை சந்திக்கிறேன் எனக் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இன்று பரந்தூர் வருகை புரிந்து 13 கிராம மக்களையும் சந்தித்து உங்களுடன் உறுதியாக துணை நிற்பேன் என தெரிவித்தார். மேலும் நான் இருக்கும் வரை பரந்தூர் விமான நிலையம் அமைய விட மாட்டேன் எனவும் உறுதியளித்து உள்ளார்.

இந்த உறுதி எங்களுக்கு ஒரு வேகத்தையும் மன உறுதியும் அளித்துள்ளது. பல அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தந்த போதும் தவெக தலைவர் விஜய் பரந்தூர் வருகிறார் என்ற தகவல் கடந்த மூன்று நாட்களாக சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனால் அவரது வருகை மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் எங்களை சந்தித்து உறுதி அளித்தது பெரும் வலிமையை எங்களுக்கு கொடுத்துள்ளது. அது எங்கள் போராட்டத்துக்கான வெற்றிக்கு ஊன்று கோலாக இருக்கும். விவசாயத்தை அழிப்பது பொருளாதார வளர்ச்சியா, விவசாயிகளின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியாக அவர்களுக்கு தெரியவில்லையா.

இதையும் படிங்க:"விமான நிலையம் என்பதை தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது"-பரந்தூர் மக்களிடம் தவெக தலைவர் விஜய் எழுப்பிய சந்தேகம்!

அவர்கள் எந்த அளவுகோலில் இதை பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தின் வேளாண் மண்டலமே பரந்தூரை சுற்றியுள்ள பகுதிகள்தான். இதை அழித்துவிட்டால் என்ன பொருளாதார வளர்ச்சி வரப்போகிறது. பரந்தூர் விமான நிலையம் அரசின் பொருளாதார வளர்ச்சி அல்ல தனிநபரின் பொருளாதார வளர்ச்சியாகும். விவசாயம் அழியக்கூடாது என்பதுதான் எங்களின் இத்தனை நாட்கள் போராட்டத்தின் கோரிக்கையாகும்.

பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புக் குழுவின் செயலாளர் சுப்பிரமணியன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

கோரிக்கை வெல்லும் வரையில் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். தக்க நேரத்தில் சட்ட போராட்டத்தையும் கையில் எடுப்போம். எங்கள் போராட்டத்திற்கு வலிமை அதிகமாகிக் கொண்டிருக்கிறது வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு தான் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு ஆளும் அரசு எங்களின் எதிர்ப்பை குறித்து சிந்திக்கும் என நம்புகிறோம். விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டால் ஆட்சிக்கு வர முடியாது என்பது அவர்களுக்கு புரியும். தேர்தல் வரும்போது யாரை ஆதரிப்பது என்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம். நாங்கள் தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு நன்றியுடன் இருப்போம். எங்களை நோக்கி வரும் தலைவர்களுக்கு நன்றி உணர்வோடு இருப்பது தான் மாண்பு,"என்று கூறினார்.

பிறந்த மண்:

ஏகனாபுரத்தைச் சேர்ந்த தேசம்மாள், "விஜய் எங்களுக்கு ஆறுதலாக பேசினார். அவர் இந்த ஊரை காப்பாற்றுவார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த வயதில் சொந்த இடத்தை விட்டுவிட்டு நாங்கள் எங்கே செல்வோம். விவசாயம் தொடர்பான பொருட்கள் சேகரித்து வைத்திருக்கின்றோம். அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு வேறு இடத்துக்குப்போக முடியாது. எங்கள் வீட்டை, எங்கள் நிலத்தை விட்டு எங்களை எதற்கு வெளியே போக சொல்கிறீர்கள். இது நாங்கள் பிறந்த மண், இங்கேயே செத்தாலும் சாவோமே தவிர ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டு தர மாட்டோம். பல வகைகளில் போராட்டம் மேற்கொண்டோம். என்னை விட்டால் இப்போதே விஜயின் கால்களில் விழுந்து விடுவேன்" என்று கூறினார்.

நெல்வா கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி,"நாங்கள் விவசாயம் செய்கிறோம். எங்கள் ஊரை அழித்துவிட்டு விமான நிலையம் எங்களுக்கு தேவை இல்லை. எங்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. இந்த நிலையில் எங்களை ஊரை விட்டு போகச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது. விஜய் பேசியது இந்த நேரத்தில் எங்களுக்கு ஒரு சந்தோசமாக இருக்கிறது. இந்த சந்தோசம் கண்டிப்பாக நீடிக்கும். எங்களுக்கு கண்டிப்பாக அவர் துணை நிற்பார்," என்று கூறினார்.

விஜயை கண்டு அச்சம்:

புண்ணியகோடி பேசுகையில்,"விஜய் இங்கு வந்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் சிறிது நேரம் அவர் பேசி இருக்கலாம். அவர் பேசிய 10 நிமிடங்களும் சிறப்பாக இருந்தது. எங்களுடன் இருந்து போராட்டத்திற்கு கை கொடுப்போம் என்று கூறிய வார்த்தை நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. விஜய் எங்களை சந்திப்பதற்கு இன்று காலை வரை போலீசார் அனுமதிப்பதில் தாமதம் செய்தனர். தமிழக அரசு அவரைப் பார்த்து பயப்படுகிறது. ஏன் இவரைப் பார்த்து இவ்வளவு பயப்படுகின்றனர் என்று தெரியவில்லை,"என்றார்.

நெல்வா கிராமத்தை சேர்ந்த தீபா,"நிறைய பேர் எங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். இது குறித்து முன்னெடுப்பு எடுக்கிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை. வரும் 2026 ஆம் ஆண்டு விஜய் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக எங்க ஊர் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இப்போது இருக்கும் அரசு நல்லது நடக்க கூடாது என்று நினைக்கிறது. நாங்ங்கள் இப்படியே இருக்க வேண்டும். கிராமங்கள் அழிந்து விட வேண்டும் விவசாயம் அழிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்,"என்று வேதனையுடன் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details