வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஆக.20) நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு, 300 பயனாளிகளுக்கு வீடு கட்டித்தர ஆணை, வீட்டு மனை பட்டா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் ஒரு வீடு கட்ட ரூபாய் மூன்றரை லட்சத்தை அரசு ஒதுக்குகிறது. இதற்கு சிலர் ரூ.10 ஆயிரம், 15 ஆயிரம் கொடு என கேட்பதாக தகவல் வருகிறது. யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம்.
அப்படி யாராவது லஞ்சம் கேட்டால், அவர்கள் குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கவும் அல்லது எனக்கு போன் செய்யவும். லஞ்சம் கேட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கொடுக்கும் திட்டத்தில் இல்லாதவர்களிடம் பேரம் பேசி காசு வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம். யாருக்கும் நீங்கள் ஒரு ரூபாய் கூட தரக்கூடாது.
மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் குறித்து பட்டியல் தயார் செய்து வருகிறோம். அவர்களுக்கெல்லாம் விரைவில் வரும். பொன்னை மேம்பாலம் வரும் 30ஆம் தேதி திறந்து வைக்கப்படும். சேர்காட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையும் அடுத்த மாதம் திறக்கப்படும்.
காட்பாடி தொகுதியில் இல்லாது என எதுவுமே கிடையாது. எனது தொகுதிக்கு நான் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு கீழே உள்ள தலைவர், கவுன்சிலர் போன்றவர்களும் ஒத்துழைக்க வேண்டும். நான் மட்டும் யோகியனாக இருந்தால் போதாது. எதிர்கட்சியினரே இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள்.
எனக்கு உண்ண உணவாக, மூச்சுக்காற்றாக, இரத்த ஓட்டமாக இருப்பது எனது தொண்டர்கள் தான். அவர்களிடம் நான் சில நேரம் கோபித்துக் கொள்வேன், அது என் உரிமை. எல்லாம் துரைமுருகன் பார்த்துக்கொள்வார் என மகிழ்ச்சியோடு போங்க நான் பார்த்துக் கொள்கிறேன்" என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவரிடம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 90 சதவீதப் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாகவும், இதற்கு திமுக சொந்தம் கொண்டாடுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு நான் பதில் சொல்லவில்லை என்றார்.