சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியும், ஆயுள் சிறைவாசியுமான நாகேந்திரன் உள்பட 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, இந்த வழக்கில் ரவுடிகள் சம்பவம் செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சீசிங் ராஜாவின் முதல் மனைவி சென்னையிலும், மற்ற 3 மூன்று மனைவிகள் ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கிருஷ்ணாம்பட்டினம் பகுதிகளில் வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து.
இதையடுத்து கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தில் பதுங்கி இருந்து அவ்வபோது வெளியில் வந்து மனைவி மற்றும் குடும்பத்தினரை பார்த்து விட்டு, தனது ரவுடி கூட்டாளிகளை சந்தித்து சதி செயல்களுக்கு ஆலோசனை வழங்கி விட்டு மீண்டும் கிருஷ்ணாம்பட்டினம் துறைமுக பகுதியில் சென்று சீசிங் ராஜா பதுங்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதேபோல இவர் ராசமுந்திரியிலும் அவ்வபோது சென்று பதுங்கி இருப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், சீசிங் ராஜா தொடர்பாக அவரது நான்கு மனைவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், சீசிங் ராஜா போலீசாரின் தொடர் நெருக்கடி காரணமாக கிருஷ்ணாம்பட்டினத்தில் இருந்து இடம் பெயர்ந்து ஆந்திராவின் உள் மாவட்டங்களான விஜயநகரம், ஸ்ரீகாகுளம், அனக பள்ளி ஆகிய மாவட்டங்களுக்குள் அவ்வபோது இடத்தை மாற்றிக் கொண்டு பதுங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடும்பத்தினரையும் அவர் தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆந்திராவின் உள் மாவட்டங்களுக்குள் பதுங்கி இருக்கும் அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் சீசிங் ராஜா மற்றும் சம்பவம் செந்தில் ஆகியோரை பிடித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய திருப்பங்கள் கிடைக்கும் என தெரிய வருகிறது.
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமன் மீண்டும் சிறையில் அடைப்பு!