தேனி: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து இன்று (ஏப்.14) தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரம் தேனி மாவட்டம் கம்பம் நகரின் வடக்குப்பட்டி பகுதி, வஉசி திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "2019 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெற வைத்தீர்கள். ஆனால் ஒரே ஒரு தவறு நடந்தது. அது என்னவென்றால் தேனி தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெறவில்லை.
எனது சொந்த தொகுதியில் கழக வேட்பாளர் தோல்வியுற்றது மிகவும் வருத்தமாக இருந்தது. பாஜகவின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி 5ஆண்டுகள் தேவைக்காக அன்றைய வேட்பாளர் ரவீந்தரநாத்தை வெற்றி பெற வைத்தார்கள். கடந்த முறை இந்த தொகுதியை விட்டுவிட்டீர்கள். ஆனால் இம்முறை நமது வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெற வைப்பீர்கள் என நம்புகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்றைக்கு நாட்டையே கொடூரமான பாதைக்குக் கொண்டு சென்று 10 ஆண்டுக்கால ஆட்சியில் பொருளாதாரத்தை முடக்கி வேலை வாய்ப்பின்மையை அதிகரித்துள்ளனர். மனித உரிமையைப் பறித்து, மாநில நீதி உரிமைகளையும், சுயாட்சி முறையையும் அதள பாதாளத்தில் தள்ளி பாசிச சர்வாதிகள் நாட்டையே தவறான பாதையில் கொண்டு செல்கின்றனர்.