தகரக் குடிசையை தாக்கிய யானை கோயம்புத்தூர்: கோவை மாவட்ட வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. இவை அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், அப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்படும்.
குறிப்பாக, நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால், யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். இவ்வாறு வலசை செல்லும் நூற்றுக்கணக்கான யானைகள், பவானி சாகர் நீர்த்தேக்கப் பகுதியான சிறுமுகைப் பகுதிக்கு வந்து, பின்னர் அங்கிருந்து நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளுக்குப் பிரிந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, அரிசி மற்றும் மாட்டுத் தீவனங்களைத் தேடி சூறையாடிச் செல்வதை குட்டியுடன் உலா வரும் மூன்று யானைகளின் கூட்டம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், இன்று (ஜன.23) அதிகாலை, பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதிக்குள் நுழைந்தது.
இதையும் படிங்க:புதுச்சேரியில் இரண்டு துண்டுகளான புதிய வீடு.. பொதுப்பணித்துறையின் கவனக்குறைவு தான் காரணமா?
அப்போது அங்கு, வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் தங்கி இருந்த தகரக் குடிசையில் அரிசியைத் தேடி சூறையாடியது. தகரக் குடிசைக்குள் இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் உயிர் பயத்தில் உள்ளேயே பதுங்கி இருந்துள்ளனர். அதனை அடுத்து, அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் எச்சரித்ததை அடுத்து, கைக்குழந்தையுடன் வடமாநிலத் தம்பதியினர் தகரக் குடிசையிலிருந்து தப்பி வெளியே ஓடினர்.
அப்போது அவர்களை ஒரு யானை துரத்த முயன்றது. இதனையடுத்து, யானையிடம் இருந்து தப்பித்து அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து உயிர் தப்பினர். அதன் பின்னர், அங்கு கூடியிருந்த மக்கள் கூச்சலிட்டும், வெடி வெடித்தும் யானைகளை விரட்டினர். இச்சம்பவத்தை அப்பகுதி மக்கள் வீடுகளின் மாடியில் இருந்து வீடியோவாக எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த மூன்று யானைகள், குடியிருப்புகளை குறிவைத்து அரிசி மற்றும் மாட்டுத் தீவனங்களை சாப்பிடுகிறது. வனத்துறையினர் வந்து இந்த யானைகளை விரட்டினாலும், இந்த யானைகள் பயப்படுவதில்லை. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பல்வீர் சிங் ஐபிஎஸ்-ன் சஸ்பெண்ட் ரத்து! - பின்னணி என்ன?