விழுப்புரம்: வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல், முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமார், மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு குப்பம், அனுமந்தை, ஆலம்பாக்கம், கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "இது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்று, நாட்டைக் காப்பாற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள். ஏனெனில், இந்தியாவின் பன்முகத்தன்மையை உறுதி செய்கிற அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க பாஜக முற்படுகிறது.
இனி பாஜக ஆட்சி அமைத்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கே ஆபத்தாகும். நாட்டில் அதிபர் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். எனவே, ஜனநாயகத்தை மீட்டு நமது உரிமைகளைக் காக்க பாசிச பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்" என்றார்.