தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊறுகாய்க்கு ரூ.35,000 அபராதம்! விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Rs 35025 Fine For Pickles

Villupuram Consumer Grievance Commission: விழுப்புரத்தில் பார்சல் சாப்பாட்டுக்கு ஊறுகாய் தராத உணவகத்திற்கு, ஊறுகாய் விலையுடன் சேர்த்து 35,025 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 1:47 PM IST

Updated : Jul 25, 2024, 2:07 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் தான் ஊறுகாயை மறந்த ஓட்டல் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கச் செய்தவர். இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராகவும் உள்ளார்.

இவ்வழக்கு குறித்து ஆரோக்கியசாமி பேசுகையில், " எனது உறவினர் நேசம் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக முதியோர்கள் 25 பேருக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பாலமுருகன் என்ற உணவகத்திற்குச் சென்று சாப்பாட்டின் விலைப் பட்டியலை கேட்டு விசாரித்தேன்.

அப்போது அங்கிருந்த உணவகத்தின் உரிமையாளர், ஒரு சாப்பாடு இங்கு சாப்பிட்டால் ரூ.70 என்றும் பார்சல் என்றால் ரூ.80 என்றும் கூறி, சாப்பாடு, சாம்பார், கார குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொரியல், அப்பளம், வாழை இலை, கவர் மற்றும் ஊறுகாய் 1 ரூபாய் பொட்டலம் கொடுக்கப்படும் என்று உணவுப் பட்டியலுடன் சேர்த்து கொட்டேஷன் ரசீதைக் கொடுத்தனர்"

இதனை அடுத்து, 25 சாப்பாட்டு பார்சல்கள் 28.11.2022 அன்று தேவை என்று முடிவு செய்து, ஒரு பார்சல் சாப்பாடு ரூ.80 வீதம் 25 பார்சலுக்கு ரூ.2 ஆயிரத்தை ஆரோக்கியசாமி, உணவகத்தின் உரிமையாளரிடம் 27.11.2022 அன்று கொடுத்துள்ளார். இந்த நிலையில், மறுநாளான 28.11.2022 அன்று உணவகத்தில் இருந்து 25 பார்சல் சாப்பாடு பொட்டலங்களை பிளாஸ்டிக் கவரில் கட்டிக் கொடுத்துள்ளனர். அதைபெற்ற ஆரோக்கியசாமி, அதற்கான ரசீதையும் கேட்டுள்ளார். அதற்கு சிறிய ரசீதையும் எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால் ஆரோக்கியசாமி, ஒரிஜினல் ரசீது கேட்டபோது ஓட்டல் உரிமையாளர் கொடுக்க மறுத்ததாக ஆரோக்கியசாமி கூறியுள்ளார்.

அதன் பிறகு வீட்டிற்குச் சென்று முதியோர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளனர். அப்போது அந்த பார்சல் உணவுடன் வழங்க வேண்டிய ஊறுகாய் இல்லாதது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆரோக்கியசாமி, கடை உரிமையாளரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த ஊழியர்களை அழைத்து உரிமையாளர் கேட்டபோது, ஊறுகாய் வைக்கவில்லை என தெரியவந்தது. எனவே ஒரு ஊறுகாய் பாக்கெட் 1 ரூபாய் வீதம் 25 ஊறுகாய் பாக்கெட்டுக்குரிய தொகை ரூ.25-ஐ திருப்பித்தரும்படி ஆரோக்கியசாமி கேட்டுள்ளார். அதற்கு உணவக உரிமையாளர் தர மறுத்துள்ளார்.

இதனை அடுத்து, முதியோர்கள் ஊறுகாய் கேட்டும் அதனை கொடுக்க முடியாததால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும், ஊறுகாய் பாக்கெட்டுக்குரிய தொகை ரூ.25-ஐ கொடுக்க வேண்டும் என்றும் ஆரோக்கியசாமி, விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை குறைதீர் ஆணையத்தின் தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன் மற்றும் அமலா ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து விசாரணை முடிந்து தற்போது அவர்கள் தீர்ப்புக் கூறியுள்ளனர்.

அந்த தீர்ப்பில், 'ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு ஆகும். இதனால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.30 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும், ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25-யும், உணவு வாங்கியதற்கான தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அபராத தொகையாக உணவக உரிமையாளர் செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் அபராத பணத்தை செலுத்த வேண்டும்' என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஓயோ லாட்ஜில் மைனர் பெண் மர்ம மரணம்.. உடன் தங்கிய கல்லூரி மாணவர் அளித்த பகீர் தகவல்.. கும்பகோணத்தில் நடந்தது என்ன?

Last Updated : Jul 25, 2024, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details