கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெத்ததாளப்பள்ளி, செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி, மாதேப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தும் கும்பல் சுற்றித் திரிவதாக வதந்தி பரவி வந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், தேவையில்லாத வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 6ஆம் தேதி, செம்படமுத்தூர் மற்றும் மாதப்பட்டி பகுதியில் பழைய பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்களை, குழந்தை கடத்தல் கும்பல் எனக் கருதி, அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக தாக்கினர். அதில் பலத்த காயமடைந்த 5 வட மாநில நபர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கராஜ் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்குள்ளானவர்கள் குழந்தை கடத்தல் கும்பல் இல்லை எனவும், அவர்கள் பழைய பேப்பர் போன்ற பொருட்களை சேகரிப்பவர்கள் எனவும், கடந்த 3 வருடங்களாக கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை, மது பாட்டில்களைச் சேகரித்து, அதில் வரும் வருமானம் மூலம் பிழைப்பு நடத்தி வந்தவர்கள் எனவும் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, குழந்தையைக் கடத்த வந்ததாகக் கூறி வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கிய 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 8 பேரை கைது செய்த நிலையில், மீதமுள்ள நபர்களை தேடி வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.