வேலூர்:வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்து கீழ் சென்றத்தூர் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வழியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று குடிநீர் தேக்கத் தொட்டியில் வந்த நீரை பருகிய அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் ஆம்புலன்ஸ் மூலமாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிராமத்தில் வந்த குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி, மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், வயிற்றுப்போக்கால் அனுமதிக்கப்பட்டிருந்த பலராமன் (80) என்பவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "பலராமனுக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வயிற்றுப்போக்கால் உயிரிழந்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.