விழுப்புரம்:விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இடைத்தேர்தலானது ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14-இல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்களது வேட்புமனுவை விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்பகுதி, வெளிப்பகுதி உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோருக்குத் தனித்தனியே அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறுவதை அடுத்து, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான மு.சந்திரசேகர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், வட்டாட்சியர் க.யுவராஜ் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலராகவும் செயல்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் சி. பழனி தெரிவித்துள்ளார்.
ஜூன் 16 (ஞாயிற்றுக்கிழமை), ஜூன் 17-ஆம் அரசு விடுமுறை (பக்ரீத்) என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது. மற்ற நாள்களில் மனுத்தாக்கல் செய்யலாம். ஜூன் 21-ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால், அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
தொடர்ந்து, ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும் மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர், அவருடன் 4 போ் என மொத்தம் 5 போ் மட்டுமே மனு தாக்கல் செய்யுமிடத்தில் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி அதிகப்படியான வாகனங்களில் வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வேட்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளதால் விக்கிரவாண்டி வட்டாட்சியரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் இடைத்தேர்தல் நியமன அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கே ஆதரவு: இந்திய குடியரசு கட்சி திட்டவட்டம்!