விழுப்புரம்: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக விளங்குபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனையடுத்து, அவர் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதும் உறுதியாகியுள்ளது.
இதனிடையே, தன்னுடையை முழு நேர சினிமாவிற்கு விடை கொடுத்துவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் கட்சியைத் தொடங்கினார். இதனையடுத்து, சமீபத்தில் தான் தனது கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சி என விஜய் அறிவித்தார்.
இந்த நிலையில், தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வி.சாலை கிராமம் பகுதியில் நடத்துவதற்கான அனுமதி பெற அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதன் தொடர்ச்சியாக 21 நிபந்தனைகளுடன் இந்த மாதம் 23ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாநாடு தேதி செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறுவதாக கப்பியாம்புலியூர், பனையபுரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் அதன் கட்சி நிர்வாகிகளால் எழுதப்பட்டது. ஆனால், தற்போது செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுவதாக கப்பியாம்புலியூர் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களில் மாற்றம் செய்யப்பட்டு, அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுவதாக வரையப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:கட்சித் தலைவராக முதன்முதலில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய்!
மேலும், அக்டோபர் 15 என்பது முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் பிறந்தநாள் ஆகும். இருப்பினும், இன்றளவும் மாநாடு அமைய உள்ள இடத்தில் எந்த வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டவில்லை என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேதி தள்ளிப் போவதாக கூறப்படும் நிலையில், மாநாடு நடத்த குத்தகைக்கு எடுக்கப்பட்ட 85 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களிடம் தேதி மாற்றத்திற்கான (தேதி குறிப்பிடப்படாமல்) ஒப்பந்தமும் வாங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம், பெரியார் பிறந்தநாள் அன்று தவெக தலைவரும், நடிகருமான விஜய் சென்னை பெரியார் திடலுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வு குறித்து திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.