கோயம்புத்தூர்:ஒவ்வொரு ஆண்டும் இந்து மக்களால் ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்நாட்களில் அனைத்து தொழில் நிறுவனங்களிலும், வீடுகளிலும், வணிக வளாகங்களிலும் பக்தர்கள் வழிபாடு மேற்கொள்வார்கள்.
ஆயுத பூஜை அன்று தொழிலுக்கு உதவும் உபகரணங்களுக்கு பட்டையடித்து, பூஜைகள் மேற்கொள்வர். விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது வழக்கம். இன்றைய தினம் கல்வியைத் துவங்கினால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்பது ஐதீகம்.
சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி (Photo Credits - ETV Bharat Tamil Nadu) அந்த வகையில், கல்வியறிவித்தல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் நடைபெற்றது. இதில், பெற்றோர்கள் தங்களது குழந்தகைகளை அழைத்து வந்து, நெல்மணிகளில் அகரம் எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் விரலைப் பிடித்து அரிசியில் தாய் மொழி எழுத்துக்களையோ, சாமி பெயர்களையோ பிள்ளையார் சுழி, அம்மா, அப்பா என்று எழுத வைப்பர்.
இதையும் படிங்க:விஜயதசமி..நெல்லில் கைப்பிடித்து 'அ' எழுதி கல்விப்பயணம் தொடங்கிய மழலையர்கள்!
அந்த வகையில் இந்த ஆண்டு சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து தொடர்ந்து வருகை புரிந்து வருகின்றனர். கோயிலுக்கு வருகை புரிந்த குழந்தைகள் தங்கள் பெற்றோரின் துணையுடன் நெல்லில் 'அ' என்ற தமிழ் எழுத்தை எழுதி தங்களின் கல்விக்கான அத்தியாயத்தை துவக்கினார்கள்.
பின்னர், வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்கள் கூறுகையில், “ எனது மகள் முதன்முறையாக பள்ளிக்குச் செல்கிறாள். இதற்காக அருள் வேண்டி இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளோம். இங்கு அரிசியில் அகரம் எழுதுவதற்காக வந்துள்ளோம். இது குழந்தைகளின் கல்வி பாதையில் முதல் நிகழ்ச்சி. இதில் கலந்துக்கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி” இவ்வாறு அவர் தெரிவித்தார்.