திருவாரூர்: கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கமலாபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த அரசு மதுபானக் கடைக்கான பார் உரிமத்தை வேறொருவரின் பெயரில் எடுத்து, கமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவி பிரபாவதியின் கணவரும், ஊராட்சி எழுத்தருமான கமலாபுரம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த அமர்நாத் என்பவர் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கமலாபுரம் அரசு மதுபானக் கடையில் பாரில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் அமர்நாத் பாருக்கு அருகில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் வைத்து காலை 5 மணியிலிருந்து கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், அரசு மதுபானக்கடை பூட்டப்பட்ட பிறகு 10 மணிக்கு மேல் பாரில் அரசு மதுபானங்களை விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மே 7ஆம் தேதி திருவாரூர் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், கமலாபுரம் பகுதியில் கள்ளச் சந்தையில் அரசு மதுபானத்தை விற்பனை செய்த தட்சிணாமூர்த்தி என்பவர் மகன் அமர்நாத் (45) கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து 55 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.