வேலூர்:அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்.18) நடைபெற்றது. இதில் தேர்தல் விதிமுறைகள் குறித்து அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கினார். மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோருடனான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்.18) நடைபெற்றது.
சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆகிய பிரிவினர்களுக்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
அதில் கூறியதாவது; அச்சகங்கள், அனுமதியைப் பெற்ற பின் தான் தேர்தல் துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை அச்சிட்டுத் தர வேண்டும். அதில் எவ்வளவு அச்சிடப்படுகிறது என்பதை நோட்டீசில் பிரிண்டிங்க் செய்ய வேண்டும். வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையோ, போஸ்டர்களையோ அச்சிடக் கூடாது. மேலும் பிரிண்டிங் செய்தவரின் பெயர் முகவரியைப் பெற்று வைக்க வேண்டும். தேர்தல் அதிகாரியிடம் விவரங்களை ஒப்படைக்க வேண்டும்.