தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசிக தலைவர் எங்கே செல்வார்? அதிமுக வழக்கறிஞர் இன்பதுரைக்கு திருமாவளவன் பதில்! - THIRUMAVALAVAN

தேர்தல் நேரங்களில் முரண்பாடான முடிவுகளை கூட எடுக்க நேரிடும். நாம் மக்களோடு நிற்போம், மக்கள் பிரச்சனைக்காக நிற்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை
விசிக தலைவர் திருமாவளவன்,அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை (Photo Credits - ETV Bharat Tamil Nadu, INBADURAI 'X' page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2024, 4:23 PM IST

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் எங்கே செல்வார்? என்று தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. வழக்கறிஞர் எங்கே இருக்கிறாரோ அங்கே இருப்பார். அவர் நம்மோடு தான் இருப்பார் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசியதற்கு, “நாங்கள் கட்சிகளாடு அல்ல, மக்களோடு இருப்போம்” என விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

மத்திய அரசின் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தென் இந்திய வழக்கறிஞர்களின் மாநாடு நேற்று(நவ.17) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இதில், விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “மூன்று குற்றவியல் சட்டங்களும் திரும்ப பெற வேண்டும் என்பது எனது கோரிக்கை. ஒரு ஆண்டுக்கு மேல் நடைமுறையில் இருந்த சட்டங்களை திரும்ப பெற வைத்தார்கள். நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. நடைமுறைக்கு வந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது என்பது ஒரு வரலாறு. அரசியல் ரீதியாக நாம் அணுகுவது ஒரு புறம் இருந்தாலும், சட்ட ரீதியாக அணுகப்பட வேண்டியது ஒன்று. இத்தகைய முயற்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கும்.

இதையும் படிங்க:"இந்தியை திணிக்கும் நோக்கத்துடன் 3 குற்றவியல் சட்டங்கள் அமல்"- அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

உங்களோடு களத்தில் இருப்போம். நாங்கள் கட்சிகளாடு அல்ல, மக்களோடு இருப்போம் என்பது இன்பத்துரைக்கு எனது பதில். மக்களுக்காக போராடுவோர் யாராக இருந்தாலும் அவர்களோடு நிற்போம். எந்த அடையாளமாக இருந்தால் என்ன? அடையாளம் முக்கியமல்ல. கட்சி, ஜாதி, மத அடையாளம் இவற்றையெல்லாம் தாண்டி சிந்திக்கவும், செயல்படவும் நாம் பக்குவப்பட வேண்டும்.

யாரும் எந்த கட்சியிலும் இருக்கலாம். எதிர்கொள்வது, கை குலுக்கிக் கொள்ளலாம். உங்கள் கொள்கை உங்களுக்கு, எனது கொள்கை எனக்கு. தேர்தல் நிலைப்பாடு முற்றிலும் வேறு. அது வெற்றி, நாட்டு நலன், கட்சி நலன், காலச் சூழலை அடிப்படையாகக் கொண்டது. முரண்பாடான முடிவுகளை கூட எடுக்க நேரும். நாம் மக்களோடு நிற்போம், மக்கள் பிரச்சனைக்காக நிற்போம்” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசியதாவது, “ வழக்கறிஞர்களுக்காக போராடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான். திருமாவளவன் எங்கே செல்வார்? என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் இங்கு தான் இருக்கிறார். வழக்கறிஞர் எங்கே இருக்கிறாரோ அங்கே இருப்பார். நான் அரசியல் பேசவில்லை. அவர் நம்மோடு தான் இருக்கிறார், நம்மோடு தான் இருப்பார், நல்லவர்களுடன் தான் இருப்பார். குற்றவியல் சட்டங்களும் குற்றவாளிகளுக்கு வழிவகுக்கக்கூடிய சட்டமாக உள்ளது. ஆகவே இதனை நாம் போராடி திரும்ப பெற வேண்டும்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details