சென்னை: பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கிட வலியுறுத்தி விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், "அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், போதைப்பொருள் ஒழிப்பு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு முன்மொழிய உள்ளோம். இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக பரப்புரை மேற்கொள்ளவுள்ளேன்.
தமிழர் எழுச்சி நாளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு முன்மொழிவதுண்டு. அதேபோல், இந்த ஆண்டும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் கருப்பொருளை மையமாகக் கொண்டு முன்மொழிய உள்ளோம்.
கிரீமிலேயர் முறை: தலித் சமூகத்தில் மட்டுமல்ல மொத்தமாக எந்த சமூகத்திலும் ஆணவக் கொலைகள் கூடாது என்பதுதான் விசிகவின் கோரிக்கை. கிரீமிலேயர் முறையை எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டில் கொண்டு வருவது தான் நாடு முழுவதும் இன்று பேசுபொருளாக உள்ளது.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அலுவலக உதவியாளர் பதவி கிடைத்தால், அந்த குடும்பத்தில் வேறு யாருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்வதுதான் இந்த தீர்ப்பு. ஒரு தலைமுறை படித்தால் போதும் வேறு யாரும் முன்னேறக்கூடாது என்பதை மறைமுகமாக சொல்கிறது இந்த தீர்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசுபவர்கள். தலித் மக்கள் மீது அக்கறையில் சொல்கிறார்களா? இல்லை வேறு காரணத்திற்காக சொல்கிறார்களா என்று நாம் உற்றுப் பார்க்க வேன்டும்.
வன்னியர் இட ஒதுக்கீடு: 10.5% இடஒதுக்கீடு அரசியல் லாபத்திற்காக, எடப்பாடி பழனிசாமி யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் இட ஒதுக்கீடு அறிவிப்பினை வெளியிட்டார். ஓபிசி மக்களுக்கான கிரீமிலேயர் வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது. ஆனால், அதை பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. இட ஒதுக்கீட்டை நசுக்கும் முயற்சியே கிரீமிலேயர். திமுக அரசு நிலையான அரசு அல்ல, மாநில அரசே நிலையானது. பல்வேறு கட்சிகள் வரும் போகும். ஆனால், ஒரு தலித்தை முதலமைச்சராக எந்த காலத்திலும் ஆக்க முடியாது.