சென்னை: மத்திய அரசின் வக்ஃபு திருத்தச் சட்டம் 2024-ஐ எதிர்த்து தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
மேடையில் பேசிய திருமாவளவன், “பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் என்ற நிலையில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் தயவால் ஆட்சி நடந்து வரும் நிலையில், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை வெளிக்காட்டும் விதமாக வக்ஃபு திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
கற்பனைகளையும், யூகங்களையும் பரப்பி விசிகவிற்கும் - திமுகவிற்கும் கசப்பை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது நடக்காது. தமிழ்நாட்டைப் போன்று இந்தியா கூட்டணி பிற மாநிலங்களிலும் வலுவாக உருவாக வேண்டும். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மிகவும் சிறப்பாக செயல்படுகிறது" என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து திருமாவளவன் பேசியதாவது, “மது ஒழிப்புக்காக போராடிய காந்தி பிறந்தநாளில் மாநாடு நடத்தினோம். அவரது சிலைக்கு மரியாதை செலுத்தச் சென்றபோது, ஆளுநர் வந்த பிறகு தான் அனுமதிக்க முடியும் என காவல் துறையினர் தெரிவித்தனர். மாநாட்டுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், காத்திருக்க முடியவில்லை. மாலை அணிவிக்கத்தான் காந்தி மண்டபம் சென்றேன். இதை குற்ற உணர்வில் திரும்பிச் சென்றதாக கூறுவது எப்படி சரி? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க:"திருமாவளவன் நாகரீகமான தலைவர் என நினைத்தேன்.. ஆனால்.." - தமிழிசை வேதனை
என் மனம் புண்படாதா?: தமிழிசை செளந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பும், நல்ல நட்பும் உள்ளது. தமிழிசை செளந்தரராஜன் குறித்து நான் பேசிய கருத்தால் அவரது மனம் காயப்பட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன். என்னைப் பற்றி தமிழிசை பேசிய கருத்து என்னை காயப்படுத்தாதா? அவரது விமர்சனத்தால் என் மனம் புண்படாதா? எனக்கு ஏதோ ஈடுபாடு இருப்பதாக மறைமுகமாக கூறினார்.