தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவோ, விஜயோ இளைஞர்களுக்கான புதிய அரசியலை உருவாக்க வேண்டும்- விசிக ஆதவ் அர்ஜுனா பேச்சு! - AADHAV ARJUNA

"திருமாவோ, விஜயோ, 2026 இல் இளைஞர்களுக்கான புதிய அரசியலை முன்னெடுக்க வேண்டும். தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள்"என்று விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

விழாவில் பேசும் ஆதவ் அர்ஜுனா
விழாவில் பேசும் ஆதவ் அர்ஜுனா (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2024, 10:19 PM IST

சென்னை: 'எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பேசுகையில்,"காதல் திருமணம் செய்ய விரும்பிய எனது தாய்க்கு எனது பாட்டி சம்மதம் அளிக்கவில்லை. ஜாதிவெறியின் காரணமாக விவசாயி ஒருவருக்கு அவர் திருமணம் செய்து வைக்கப்பட்டார். விவசாயத்தில் ஏற்பட்ட இழப்பு மற்றும் குடும்ப வன்முறையின் விளைவாக எனது தாய் தற்கொலை செய்து கொண்டார்.

ஐந்து வயதில் தாயை இழந்து தவித்த என்னை, உறவினராக இல்லை என்ற போதிலும் எனது பெரியம்மா என்ற நிலையில் இருந்து திலகவதி ஐபிஎஸ் தான் அக்கறையுடன் என்னை கவனித்துக் கொண்டார். பின்னர் நான் என் மாமாவின் அரவணைப்பில் வளர்வதற்கு உதவி செய்தார். ஆனாலும், சிறு வயதில் தாயை இழந்து வாடிய எனக்கு நூலகங்கள்தான் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தன. அங்கு தான் அண்ணல் அம்பேத்கரை பற்றி நிறைய படிக்க துவங்கினேன். அவரை படிக்க படிக்க, அந்த ஆளுமையை பற்றி இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது.

ஒரு கட்டத்தில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தையே இயற்றிய வல்லமை பொருந்திய அம்பேத்கரால் தேர்தல் அரசியலில் மட்டும் ஏன் வெற்றி பெற இயலவில்லை என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஜாதி என்ற ஒற்றை வார்த்தை தான் அந்த கேள்வி்க்கான விடையாய் கிடைத்தது.இந்த கொடுமையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் ஒர் வெளிபாடாக நான் மேற்கொண்ட முயற்சி தான் இன்று என்னை இந்த மேடையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு (ETV Bharat Tamil Nadu)

இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பை பெற முடிந்த சமூகத்தினரால் ஆட்சி, அதிகாரத்தில் மட்டும் ஏன் பங்கு பெற இயலவில்லை? ஏனென்றால் தமிழ்நாட்டில் தற்போதும் மன்னர் பரம்பரை ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மன்னராட்சியை ஒழிப்பதன் மூலம் மட்டுமே எளிய மக்களுக்கு அதிகாரம் என்ற அண்ணல் அம்பேத்கரின் கனவை நாம் நனவாக்க முடியும்.

தமிழ்நாட்டில் இனி மன்னராட்சி கூடாது. கருத்தியல் சார்ந்து இயங்கும் தலைவன் தான் இனி தமிழ்நாட்டை ஆள வேண்டும். தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் புதிய கருத்தியல் தலைவராக உருவெடுத்துள்ளார். ஊழல் குறித்தும், மதவாதம் குறித்தும் அவர் எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில் ஜாதி. மதத்தை போல ஊழல் இங்கு தீவிரமாக எடுத்து கொள்ளப்படுவதில்லை. ஊழலை நாம் மிக எளிதாக கடந்து விடுகிறோம் என்று கருதுகிறேன்.

விஜய்க்கு சினிமாவில் 2000 கோடி ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு வாய்ப்பிருந்தும், அதனை விட்டு விட்டு அரசியலுக்கு வருவதற்கு பெரிய மனது வேண்டும். ஆனால் இங்கு ஒரு நிறுவனம், ஒட்டுமொத்த திரைத் துறையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த கொடுமை எல்லாம் ஒழிய, திருமாவாக இருந்தாலும் சரி... விஜயாக இருந்தாலும் சரி... 2026 இல் இளைஞர்களுக்கான புதிய அரசியலை உருவாக்க வேண்டும். தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள் " என்று ஆதவ் அர்ஜுனா பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details