திருச்சி: திருச்சி எஸ்.பி. வருண்குமார் ( தற்போது டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்) குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக குற்றசாட்டு எழுந்தது. தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கிற்காக நீதிபதி உத்தரவின் அடிப்படையில், எஸ்.பி. வருண்குமார் இன்று (டிச.30) குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி (பொறுப்பு) பாலாஜி முன்பு நேரில் ஆஜராகினார். அப்போது வருண்குமார் '' நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும், தன்னுடைய கடமையை செய்ததற்காக தன்னை குறித்தும் தன் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும், ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.
மேலும், பொதுவெளியில் சாதியை குறித்தும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் சீமான் பேசியதாக விரிவான வாக்குமூலத்தை அளித்தார். அதனை நீதிபதி பாலாஜி முழுமையாக பதிவு செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சாட்டை துரைமுருகன் கைது
நீதிமன்ற நடைமுறைகள் முடிவடைந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி எஸ்.பி. வருண்குமார், '' இந்த வழக்கை என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நான் தொடரவில்லை. மாறாக தனிப்பட்ட முறையில் தான் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இது குறித்து என்னுடைய உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக நான் தெரிவித்துவிட்டேன். கடந்த 2021 ஆம் ஆண்டு நான் திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பொழுது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் அவதூறான சில விஷயங்களை பதிவு செய்தார். அதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. எனவே அவரை கைது செய்தோம். அப்போது இருந்தே அந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்னை விமர்சனம் செய்தார்கள்.
அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வழக்கிற்காக அவரை கைது செய்த பொழுது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்னை அவதூறாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தார்கள். என்னுடைய குடும்பத்தை குறித்தும் அவதூறான கருத்தை பரப்பினார்கள். என்னுடைய மனைவியும் புதுக்கோட்டை எஸ்.பியுமான வந்திதா பாண்டே மற்றும் என் குழந்தைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் மார்ஃபிங்க் செய்து சில புகைப்படங்களை பகிர்ந்தார்கள். அந்த புகைப்படங்கள் இன்னமும் சமூக வலைத்தளங்களில் நீக்கப்படாமல் உள்ளது.