கோயம்புத்தூர்:திமுக தலைமை அலுவலகம் சார்பில், ஏப்ரல் 6-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில், 16 மாவட்ட ஆட்சியர்கள் பெண்கள். 10க்கும் அதிகமான அரசுத் துறைகளில் செயலாளர்கள் பெண்கள். உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் முதலான பதவிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்.
ஆசிரியர்கள், மருத்துவர்கள், நீதிபதிகளில் ஆண்களுக்கு சமமாக பெண்கள். இதற்கெல்லாம் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுகளே காரணம்” என குறிப்பிட்டு அறிக்கை ஒன்று வெளியானது. இது குறித்து கோவை தெற்கு தொகுதி எம்.ஏல்.ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், "தேர்தல் தேதி நெருங்க, நெருங்க திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது இந்த அறிக்கையில் தெரிகிறது. இந்தியாவில் அரசியல் அதிகாரம்தான் உண்மையான அதிகாரம்.
அரசியல் அதிகாரம் இருந்தால்தான், ஒருவர் மற்றவர்களுக்கு கொடுக்கும் இடத்திற்கு வர முடியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பட்டியலினத்தவர் 12 பேர், பழங்குடியினர் 8 பேர், பிற்படுத்தப்பட்டோர் 27 பேர், பெண்கள் 11 பேர் உள்ளனர்.
சுதந்திர இந்தியாவின் 77 ஆண்டுகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பெண்கள் அதிகம் இருக்கும் மத்திய அமைச்சரவை பிரதமர் மோடியின் அமைச்சரவைதான். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகிய இருவர் மட்டுமே பெண்கள்.
அமைச்சரவையில் 34வது இடம், அதாவது கடைசி இடம் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் கயல் விழிக்குதான். இதுதான் பெண்கள் வரலாற்றில் இமலாயப் புரட்சியா? ஆனால், 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் நிதியமைச்சராக பெண்ணை நியமித்திருக்கிறார் பிரதமர் மோடி.
இதுதான் பெண்கள் வரலாற்றில் புரட்சி. இதுதான் உண்மையான சமூக நீதி. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உரிமைத் தொகை வழங்கவில்லை.