தேனி: நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமாக 7 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் மற்றும் ஜூன் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
இதனையடுத்து மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன. ஏற்கனவே, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து, 16 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலில், தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நாராயணசாமி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேனி கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வரும் இவர், தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால், தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, கட்சி நிர்வாகிகளுடன் நேற்று பெரியகுளம் அருகே உள்ள கெ.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் நாராயணசாமி கூறியதாவது, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னை தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது நான் செய்த பெரும் பாக்கியம்.
45 ஆண்டுகள் சாதாரண தொண்டனாக இக்கழகத்தில் பணியாற்றி வருகிறேன். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. எனவே, தான் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றால், தேனி தொகுதியை மேம்பாடு அடைய பாடுபடுவேன். எனக்கு தமிழ் உட்பட ஏழு மொழிகள் தெரியும். எனவே, இரட்டலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று தெரிவித்தார்.
தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக தங்க தமிழ்செல்வன் மற்றும் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாலும், தேனி மக்களவைத் தொகுதியில் நாராயணசாமிக்கு கடும் போட்டி ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஒத்த வீடியோவால் பறிபோன எம்பி வாய்ப்பு.. திமுக கூட்டணியின் நாமக்கல் வேட்பாளர் மாற்றத்தின் பின்னணி என்ன? - KMDK Namakkal Candidate Changed