சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் 80 இடங்களும், தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 இடங்கள் உள்ளன.
மேலும் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்)40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் உள்ளன.
அதேபோல் கால்நடை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 3ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் பெறப்பட்டது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டபடிப்பிற்கு 14 ஆயிரத்து 474 மாணவர்களும் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சேர 3000 பேர் என 17,474 பேர் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு, பிடெக் படிப்புகளில் சிறப்பு பிரிவு மாணவர்களாக விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பில் 19 இடங்களும், பிடெக் உணவுத் தொழில்நுட்பம்,கோழியினத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் 6 இடங்கள் என 25 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பில் 43 இடங்களும், பிடெக் உணவுத் தொழில்நுட்பம்,கோழியினத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் 7 இடங்கள் என 50 இடங்களும் நிரம்பி உள்ளது.