தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆன்மீக பூமியாக திகழும் தமிழகம்": கோவை மகாசிவராத்திரி விழாவில் அமித் ஷா பேச்சு! - AMIT SHAH IN ISHA YOGA CENTRE

ஆன்மீகம் குறித்து பேசும்போது தமிழ்நாட்டை குறிப்பிடாமல் இருக்க முடியாது என்றும், இந்த பூமி ஆன்மீக தலமாக திகழ்கிறது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

விழாவில்  பேசும் மத்திய அமைச்சர் அமித் ஷா
விழாவில் பேசும் மத்திய அமைச்சர் அமித் ஷா (@ Sadhguru Youtube)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2025, 9:02 PM IST

கோயம்புத்தூர்:ஆன்மீகம் குறித்து பேசும்போது தமிழ்நாட்டை குறிப்பிடாமல் இருக்க முடியாது என்றும், இந்த பூமி ஆன்மீக தலமாக விளங்குகிறது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அருகே அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மேடையில் அவர் பேசியதாவது:

இந்தியா முழுவதும் மஹா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் பக்தி என்ற கும்பமேளா நடைபெற்று வருகின்றது. சிவனின் முழு அருளை பெரும் நாளாக மகா சிவராத்திரி நாள் அமைந்துள்ளது.

சிவன் அழிக்கும், காக்கும் கடவுளாகவும், முதல் யோகியாகவும் விளங்குகிறார். அவர் வழிபாட்டு கடவுளாக மட்டுமின்றி பிரபஞ்சத்தின் மூலமாகவும் திகழ்கிறார்.

ஈஷா யோகா மையத்தை சத்குரு பக்திக்கான இடமாக மட்டுமின்றி, புனிதமான இடமாக உருவாக்கி உள்ளார். இந்த மையம் யோகா மூலம் இலட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.இங்கு 112 அடி உயர ஆதியோகி சிலை மக்களுக்கு அனைத்தும் அளிக்கும் விதமாக அமைத்துள்ளது.

இதையும் படிங்க: மறுசீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்களில் ஒரு தொகுதி கூட குறையாது....அமித்ஷா விளக்கம்!

இன்றைய இளம் தலைமுறையை ஆன்மீகத்தை நோக்கி ஈர்ப்பதில் ஈஷா பெரும் பங்கு வகிக்கிறது. இளைய தலைமுறை, ஆன்மீகத்தை இணைக்கும் மகத்தான பணியை சத்குரு செய்து வருகிறார்.ஆதியோகி மூலம் அவர் ஒரு மகத்தான இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். யோகா ஓர் மனிதனை நல்வழிப்படுத்தி வாழ்வில் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.

ஆன்மீக வரலாற்றில் தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்த பூமி ஆன்மீக தலமாக விளங்குகிறது. திருமூலர் சைவ மரப்பில் 3 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். அகத்தியர் மற்றொரு உதாரணம். சத்குரு மஹா சிவராத்திரி விழா மகத்தானது. இதில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று அமித் ஷா பேசினார்.

முன்னதாக, மாலை 5:45 மணியளவில் ஈஷா யோகா மையத்துக்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். அவருடன் சத்குரு ஜக்கி வாசுதேவ், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பூஜையில் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details