விழுப்புரம்: ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கலாச்சார மரபுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சுற்றுலாவை, பரந்த நோக்கில் அணுகுவதே உலக சுற்றுலா தினத்தின் நோக்கம்.
அந்த வகையில், இந்தியாவில் உள்ள சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்து, மராட்டியர்களின் ராணுவ கேந்திரங்களாக இருந்த 12 கோட்டைகளை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு, யுனெஸ்கோவிற்கு கடந்த 2011ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், மகாராஷ்டிராவில் உள்ள 11 கோட்டைகளும், தமிழகத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றது.
இதனை அடுத்து, யுனெஸ்கோ குழுவினரின் வருகையையொட்டி, செஞ்சி கோட்டையில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், பொறியாளர்கள் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு சீரமைப்பு பணிகளைச் செய்து வந்தனர். இதில் கல்யாண மகாலின் வெளிப்பகுதியில் வண்ணமடித்து அழகுபடுத்தியுள்ளனர்.
இதுமட்டுமல்லாது, செஞ்சி கோட்டையில் உள்ள அகழிகள், நீர் நிலைகள், பூங்காக்கள், புல் தரைகள் அனைத்தையும் சீரமைத்துள்ளனர். கோட்டை குறித்த வரலாற்றுத் தகவல்களையும், வெண்கலத்தால் ஆன கல்வெட்டில் வடிவமைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரியச் சின்னமாக தேர்வு செய்ய தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'யுனெஸ்கோ' தேர்வுக் குழுவின் பிரதிநிதியான வாஜாங் லீ தலைமையில் மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் நேற்று (செப்.27) செஞ்சிக் கோட்டையை ஆய்வு செய்தனர்.