திண்டுக்கல்: கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்த திருச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தங்கும் அறையில் பார்பிக்யூ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காமல் உறங்கியதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் அளித்த தகவலின் படி, "நேற்று திருச்சியைச் சேர்ந்த சிவசங்கர், சிவராஜ், ஆனந்த பாபு, ஜெயகண்ணன் ஆகிய நான்கு இளைஞர்கள் சுற்றுலா வந்துள்ளனர். சின்னபள்ளதில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இரண்டு அறை எடுத்துத் தங்கிய இளைஞர்கள், மதுபானம், பார்பிக்யூ செய்ய சிக்கன், மசாலா பொருட்கள், மேலும் அதனைத் தயார் செய்ய அடுப்புக்கரி, மற்றும் அடுப்பு ஆகியவற்றைத் தயார் செய்து எடுத்துவந்துள்ளனர்.
கொடைக்கானலில் நேற்று நண்பகல் முதல் இரவு வரை விடாமல் பெய்த மழையால், நான்கு இளைஞர்களும் நேற்று இரவு மது அருந்திவிட்டு, அடுப்புக்கரியைக் கொண்டு தங்கும் அறையிலேயே பார்பிக்யூ சிக்கன் சமைத்துள்ளனர். பிறகு, ஆனந்த பாபு, ஜெயகண்ணன் ஆகிய இருவரும் ஒரு அறையிலும் சகோதரர்களான சிவசங்கர், சிவராஜ் ஆகிய இருவர் வேரொரு அறையிலும் உறங்கியுள்ளனர்.
இதில், இரவு பார்பிக்யூ சிக்கன் சமைத்து விட்டு அடுப்பினை அணைக்காமல், குளிருக்காக அப்படியே விட்டு விட்டு ஆனந்த பாபு, ஜெயகண்ணன் ஆகியோர் தங்களது அறையில் உறங்கியதாக தெரிகிறது. இன்று காலை சிவசங்கர், சிவராஜ் ஆகியோர் ஆனந்த பாபு, ஜெயகண்ணனை எழுப்ப முயற்சித்த போது இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.