கோயம்புத்தூர்:தடாகம், பெரிய தடாகம், சோமையனூர், கணுவாய் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாய் மற்றும் அதன் குட்டி யானை ஊருக்குள் சுற்றி வருகிறது. பகல் முழுவதும் வனப்பகுதிக்குள் இருக்கும் இந்த இரு காட்டு யானைகளும், இரவு நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உலா வருகிறது. மேலும், வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் அரிசி, தவிடு, புண்ணாக்கு போன்றவற்றை தேடி வீட்டிற்குள் நுழைந்தும் வருகிறது.
நேற்று முன்தினம் இரவு தண்ணீர் பந்தல் பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசைக்குள் இந்த இரண்டு யானைகளும் புகுந்ததால், அங்கிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பின் வழியாக தப்பிச் சென்று உயிர் பிழைத்தனர். அதேபோன்று, நேற்று இரவு கணுவாய் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் இந்த இரண்டு யானைகளும் புகுந்துள்ளது. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவலை அறிந்த மக்கள், வீட்டின் மொட்டை மாடிகளில் யானைகளைக் காண்பதற்காக நின்று கொண்டிருந்தனர்.