தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் டிடிவி தினகரன் போட்டியா? பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு! - Lok Sabha Elections 2024

AMMK BJP Alliance: பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 3:41 PM IST

Updated : Mar 20, 2024, 5:38 PM IST

சென்னை:சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் முடிவில், தொகுதி உடன்படு கையெழுத்தானது. இதன்படி, பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், “நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை கொடுத்துள்ளார்கள். என்ன என்ன தொகுதிகள் என்பது பாஜக அறிவிக்கும். அவர்கள் அறிவித்தால்தான் நன்றாக இருக்கும். குக்கர் சின்னத்தில் தான் போட்டியிட பதிவு செய்துள்ளோம். தேர்தல் ஆணையத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

இதனையடுத்து, Say no to திராவிட அரசியல் என அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, “திமுகவையும், எடப்பாடி தலைமையிலான கட்சியையும் சொல்லி இருப்பார். நாங்கள் ஜெயலலிதாவை அடையாளமாகக் கொண்டுள்ள கட்சி. இங்கே பிறந்தவர்கள் எல்லாம் திராவிடர்கள்தான், அதில் மாற்றுக்கருத்து இல்லை. உறுதியாக எங்கள் வேட்பாளர்கள் பெரிய சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனவும் அவர் கூறினார்.

நீங்கள் போட்டியிட உள்ளீர்களா என்ற கேள்விக்கு, “இன்னும் முடிவு செய்யவில்லை. தேனியில் ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்தவன் நான், தேனி மக்களோடு பெரிய பாசப்பிணைப்பு உள்ளது எனவும் பார்ப்போம்” என பதிலளித்தார். மேலும், “தஞ்சை எனக்கு சொந்த மண். எங்கள் கட்சியில் 9 பேர்தான் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்கள். அந்த பட்டியலை அவர்களிடம் கொடுத்துள்ளேன். எண்ணிக்கை என்பது முக்கியம் இல்லை. கூட்டணியின் வெற்றிதான் முக்கியம்.

நாங்கள் 9 தொகுதியில் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். எது கொடுத்தாலும் சரி என்று இருந்தோம். ஏற்கனவே வேறு தொகுதிகள் சொல்லி இருந்தார்கள். தற்போது வேற தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதி என்றாலும் கொடுங்கள் என்றேன், குறைந்தபட்சம் 2-இல் போட்டியிடுங்கள் என்று அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.

டெல்டா, தென் மாவட்டங்களில் உள்ள 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் எங்களுக்கு வாக்கு வங்கி இருக்கிறது. எங்களோடு சேர்பவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. மற்ற தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையை நான் இன்னும் பார்க்கவில்லை. மக்களை ஏமாற்றும் வேலையாகத்தான் இருக்கும்” என பேசினார்.

தொடர்ந்து, தமிழக மக்களை தீவிரவாதிகள் என பாஜக பெண் மத்திய அமைச்சர் ஒருவர் என பேசியது தொடர்பான கேள்விக்கு, “யாரோ ஒருவர் செய்ததற்காக ஒரு மாநில மக்களை தீவிரவாதி என சித்தரித்து பேசுவது யாராக இருந்தாலும் தவறு. அப்படி பேசி இருந்தால், மத்திய அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் பேசியதை நான் கவனிக்கவில்லை. அவர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளதாக சொல்கிறார்கள்” என பதிலளித்தார்.

இதையும் படிங்க:திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு; எந்தெந்த சமுதாயத்திற்கு எவ்வளவு பிரதிநிதித்துவம்?

Last Updated : Mar 20, 2024, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details