நீலகிரி:நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே நாடு காணி சோதனை சாவடி அமைந்துள்ளது. தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, இந்த சோதனை சாவடி வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களையும், போலீசார் சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆய்வாளர் சங்கமேஸ்வரன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கலையரசி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் இரண்டு பேர் சோதனை சாவடியைக் கடக்க முயன்றனர். இதனையறிந்த போலீசார் அவர்கள் அழைத்து விசாரித்த போது, முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார். அவர்கள் இருவரையும் தேவாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணையில் தேவாலா ஹாட்டி பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் சசிகுமார் என்ற இருவரும் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள மருதா என்ற இடத்தில் இருந்து 1.5 லட்சம் ரூபாய்க்கு புதிய ரக நாட்டுத் துப்பாக்கியை வாங்கியதாகவும், அதனைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.