நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் பகல் நேரங்களில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் சர்வசாதாரணமாக வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சிறுத்தை வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில் குன்னூர் பகுதியில் நாகராஜ் என்பவர் ஐந்து மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மேச்சலுக்காக சென்ற ஐந்து மாடுகளில் நான்கு மாடுகள் மட்டுமே வீடு திரும்பியதாகவும், ஒரு மாட்டை காணவில்லை; எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை பசு மாடு ஒன்று கழுத்தில் பயங்கர காயத்துடன் கிடப்பதாக நாகராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலறிந்த நாகராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, இரண்டு சிறுத்தைகள் பசுமாட்டை வேட்டியாடி சாப்பிட்டதை பார்த்ததாக அவர் வேதனையுடன் கூறுகிறார்.
பின்பு இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலறிந்த குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சிறுத்தையை பிடிப்பதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிறுத்தை நடமாடும் பகுதிகளில் கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசி முபாரக் கூறுகையில்,"குன்னூர் பகுதியில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் வலம் வருவதால் பொதுமக்க அச்சமடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் உணவு மற்றும் இறைச்சி கழிவுகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் வீசி செல்வதால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. குன்னூர் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக அகற்றினால் வனவிலங்குகள் குடியிருப்பில் வருவதை தவிர்க்கலாம்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க :லவ்டேல் பகுதியில் சுற்றித்திரியும் கரடி.. ரேஷன் கடை சேதம்.. பொதுமக்கள் வேதனை! - Bear in Lovedale area