சென்னை: விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் உத்தரப் பிரதேசம் கான்பூர் உயிரியல் பூங்கா இடையே விலங்கு பரிமாற்றம் ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்றது.
இதில் உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிபோன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் நான்கு இனங்கள் வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.
இதற்கு மாற்றாக, வண்டலூரில் இருந்து ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்பு, 2 ஜோடி சருகுமான், 3 நெருப்புக்கோழி, ஒரு ஜோடி பச்சை உடும்பு, ஓர் ஆண் சாம்பல் ஓநாய் ஆகியவை கான்பூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டன. புதியதாக வருகை தந்த இந்த விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு, தனிக் கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், நேற்று முன்தினம், வழக்கம்போல் பராமரிப்பு பணியில் இருந்த தற்காலிக பணியாளர் சுகுணா மற்றும் ஜான் ஆகிய இருவரும் குரங்குகளுக்கு உணவு வைக்கும்போது, 2 குரங்குகள் கூண்டிலிருந்து தப்பித்து காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டன. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள், வன காப்பாளர்கள் உதவியுடன், மாயமான குரங்குகளை தேடி வருகின்றனர்.