சென்னை:சென்னையில் உள்ள தனியார் வங்கியில், அதிக வைப்புத்தொகை வைத்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தைக் கூறி, முதியோரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7.5 கோடி வரை மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற வங்கி மேலாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், இந்த மோசடியில் உடந்தையாக இருந்து கமிஷன் பெற்று முன்னாள் ஊழியர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை ரத்னா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மெய்யப்பன் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் யெஸ் வங்கி (Yes bank) அடையார் கிளையில் சேமிப்புக் கணக்கு பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், அக்கிளையின் மேலாளராக பணிபுரிந்த பேட்ரிக் ஹோப்மேன் என்பவர், கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராஜேந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி மூத்த குடிமக்கள் என்பதால், பணத்தை டெபாசிட் செய்தால் அதிகப்படியான வட்டி கிடைக்கும் என்று பேட்ரிக் ஆசை வார்த்தைக் கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆசை வார்த்தை கூறி பண மோசடி:
அதையடுத்து வங்கி மேலாளரின் ஆசை வார்த்தைகளை நம்பிய ராஜேந்திரன், அவரது பெயரிலும் அவரது மனைவி பானுமதி ராஜேந்திரன் பெயரிலும் இரண்டு வைப்பு நிதிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து, ரூ.7.5 கோடி வைப்பு நிதியாக வைத்துள்ளார். இதற்கிடையே, கணவன் மனைவி இருவரும் வெளிநாடு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், வங்கி கிளையின் மேலாளர் பேட்ரிக் ஹோப்மேன், ராஜேந்திரனுக்கு தெரியாமல் அவரது வங்கிக் கணக்கிற்கு செக் புக் பெற்று, அவர்களின் கையொப்பத்தைப் போலியாக போட்டு, அந்த பணத்தை பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
ராஜேந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் விசாரணையில் தான் இந்த மோசடி நிஜ உலகிற்கு தெரிந்துள்ளது. ராஜேந்திரன் புகாரில், தங்களது பணத்தை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறும் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.