சிவகங்கை:காரைக்குடி அருகே உள்ள கமலை என்ற கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி - விஜயா தம்பதியின் மகன் நாகராஜ். கூலித்தொழிலாளர்களுக்கு மகனாக ஏழ்மை குடும்பத்தில் பிறந்த நாகராஜ் மாற்றுத்திறனாளி ஆவார். தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை கமலை அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த நாகராஜூக்கு மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீர்க்கலைக்காடு அரசுப் பள்ளிக்கு தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம்.
சாலை வசதி, பேருந்து வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், மேல்நிலை பள்ளிப்படிப்பை மேற்கொள்ள 8 வருடங்களாக நாகராஜ் சிரமங்களை எதிர்கொண்டு பள்ளிக்கு நடந்தே சென்றுள்ளார். பள்ளிக்குச் செல்வது மட்டுமல்லாமல், தனது பெற்றோருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில், கால்நடைகளை பராமரிப்பது, அவற்றிற்கு உணவளிப்பது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 435 மதிப்பெண்கள் பெற்ற நாகராஜ், பள்ளி ஆசிரியர்களின் உந்துதலோடு நீட் தேர்விற்கு படித்து, தனது முதல் முயற்சியிலேயே 136 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் இவருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப் போலவே, அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் ரவியும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
தனது எட்டு வயதில் தாயை இழந்த ரவி, தந்தை உடையப்பன் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கத்தால் கமலை அரசு ஆரம்பப் பள்ளியிலும், பீர்க்கலைக்காடு அரசுப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனுடன் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து 597 மதிப்பெண்களுடன் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றார்.
இது குறித்து மாணவர் நாகராஜ் கூறுகையில், “எங்கள் கிராமத்தில பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு அதிகளவு விருப்பம் காட்டமாட்டங்க. என்னத்த படிச்சுகிட்டு வேலையப் பாருனு சொல்லிடுவாங்க. ஆனா எங்க ஸ்கூல் சாரு அதுக்கு இடம் கொடுக்காம, நாங்க படிக்கனும்னு எல்லார் கிட்டையும் பேசுனாரு. அவரால தான் நாங்கள் இன்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம்.
ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பீர்க்கலைக்காட்டில் உள்ள பள்ளியில் படித்தேன். 3 கிலோ மீட்டர் நடந்து வந்து தான் படிச்சேன். ஏன்னா பஸ் வசதி எதுவுமே கிடையாது. இப்போது தான் ரோடு போட்ருக்காங்க. உன்னால நடக்க முடியல. உன்ன மாதிரி இருக்க பசங்களுக்கு நீ சிகிச்சை குடுக்கனும்னு எங்க தலைமை ஆசிரியர் சொன்னாரு. எங்க முத்துராமலிங்கம் சாரோட உதவியால நான் மாவட்ட நீட் பயிற்சி மையத்துல சேர்ந்து படிச்சேன். நீட் தேர்வில் 136 மார்க் எடுத்து பாஸ் பண்ணேன்.
எனது கால் பிரச்னைக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது, பணமில்லாததால் சிகிச்சை அளிக்க மறுத்துட்டாங்க. எனது நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாது. சிகிச்சைக்கு பணம் தடையாக இருக்கக்கூடாது. எங்களது இந்த சாதனையால் யாருக்கும் தெரியாமல் இருந்த எங்களது ஊர் இப்போது வெளியில் தெரிகிறது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
மாணவர் ரவி கூறுகையில், “5ஆம் வகுப்பு வரை கமலை அரசுப் பள்ளியில் படிச்சேன். 6ஆம் வகுப்புல இருந்து 12 வரையும் பீர்க்கலைக்காடு அரசுப் பள்ளியில் படிச்சேன். இங்க இருக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் நீட் பயிற்சி மையத்துல சேர்ந்து படிச்சேன். நீட் தேர்வில் 595 மார்க் வாங்கி, மதுரை மருத்துவக் கல்லூரியில் இலவசமா சீட் வாங்கிருக்கேன். என்னைய மாதிரி வறுமையில இருக்கிற மாணவர்களுக்கு படிப்ப கொடுத்தால், அவர்கள் அடுத்த தலைமுறையையும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள்” என்றார்.
மாணவர் நாகராஜின் தாய் விஜயா கூறுகையில், “நாங்க கூலி வேல தான் பாக்குறோம். என் மகன் நல்லா படிச்சு நீட் தேர்வுல பாஸ் பண்ணிட்டான். நாகராஜ், ரவி இரண்டு பேரும் நல்ல மருத்துவராகி, இந்த ஊர் மக்களுக்கு இலவசமா மருத்துவம் பார்க்கணும். இது ஆசை மட்டுமில்ல, அவர்களின் ஆசிரியர்கள், கிராமத்தினரின் ஆசை” என்று கூறினார்.
சோதனைகளைக் கண்டு துவண்டு போகாமல், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் மனஉறுதியுடன் போராடி மருத்துவர் என்னும் இலக்கை எட்டிய மாணவர்களை அக்கிராம மக்கள், ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து முதல் மருத்துவர்; நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்! - Village student pass in NEET Exam