தேனி:ஆண்டிபட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில், உசிலம்பட்டி பகுதியில் இருந்து தேனி நோக்கி வந்த காரும், ஆண்டிபட்டியில் இருந்து உசிலம்பட்டி நோக்கிச் சென்ற மினி லாரியும் இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இந்த விபத்தில், காரின் ஒரு பக்கம் முற்றிலுமாக நொறுங்கியதில், காரில் பயணித்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், காரின் உள்ளே சிக்கியிருந்த இரண்டு பேரின் உடல்களை போலீசார் போராடி மீட்ட நிலையில், அவர்களது உடல்களை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அதிகாரி சங்கு முத்தையா மற்றும் அவரது ஓட்டுநர் என தெரிய வந்துள்ளது.
மேலும், மினி லாரியில் வந்த ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஆண்டிப்பட்டி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பல்லாவரத்தில் 400 கிலோ ரேஷன் அரசியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!