திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரிய வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும், இவரது மகன் ரஞ்சித் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மருந்தியல் (Pharmacology) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த சூழலில், இன்று (மே 18) வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ள ரஞ்சித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரும், தங்களது சொந்த நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகளையும் அவிழ்த்துக்கொண்டு, மழைக்காக அதே நிலத்தில் உள்ள மாமரத்தின் அடியில் பசு மாடுகளுடன் நின்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்பொழுது, கனமழையின் காரணமாக மாமரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சரவணன், அவரது மகன் ரஞ்சித் மற்றும் இரண்டு பசு மாடுகள் ஆகியோரின் மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்த நிலையில், தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.